இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பிரித்வி சாவினை சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களுடன ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய இரசிகர்களை 18 வயது  பிரித்வி சாவிடமிருந்து அளவுக்கதிகமாக எதிர்பார்க்கவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தனது முதல் டெஸ்டில் வெளிப்படுத்திய திறன் காரணமாக நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்,எனினும் நாங்கள் அவரை வேறு  எவருடனும் தற்போதைக்கு ஒப்பிடக்கூடாது என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

பிரித்வி சாவிற்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கிரிக்கெட்டினை இரசித்து விளையாட நாங்கள் அனுமதிக்கவேண்டும் நாங்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய வீரராக அவர் வளர்வதற்கான சுதந்திரத்தை நாங்கள் வழங்கவேண்டும் எனவும் விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

பிரித்வி சாவை மிகச்சிறந்த திறமையை கொண்டவர் என குறிப்பிட்டுள்ள கோலி அவர் அதனை தனது முதலாவது டெஸ்டிலேயே நிருபித்துள்ளார்,அவர் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பதால் அவரால் தொடர்ந்தும் சாதனைகளை நிகழ்த்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.