ஐக்கிய இலங்கைக்குள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்ற பலமான   நிலைப்பாட்டினையும்  உணர்வையும் மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதுடன் பக்கசார்பான அரசியல் பிடியில் இருந்தும் நாடு விடுபட்டுள்ளது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு திருத்தும் தொடர்பில் மக்களின் கருத்தறியும் நிபுணர்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். 

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிபுணர்குழு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது யோசனைகளை பெற்றனர்.  சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதன்போதே  ஜனாதிபதி  கருத்தறியும் நிபுணர் குழுவிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்த சந்திப்பு தொடர்பில் அவ் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயனயாக தெரிவிக்கையில்,

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களின் கருத்துகளை அறிந்து அதற்கமைய அரசியல் அமைப்பில் மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுகள்  குறித்து ஆராய   அரசாங்கம் எம்மை நியமித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு மாத காலமாக மக்களின் கருத்துகளை ஆராய்ந்து வந்துள்ளோம். அரசியலமைப்பில் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கும் செயற்பாட்டில் நாம் நாட்டின்  சகல பகுதிகளிலும் மக்களை சந்தித்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அவ்வாறு இருக்கையில் இன்று (நேற்று)  ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை சந்தித்து எமது அறிக்கையை தொடர்பிலான தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். 

இந்த காலகட்டத்தில் நாம் நாட்டில் சகல மக்களையும் சந்தித்து அவர்களின் நிலைப்பாட்டை ஆராய்ந்தோம். அதன்போதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அதே சந்தர்ப்பத்தில் நாட்டின்   ஐக்கியத்தை பலப்படுத்தும் நோக்கிலும்  அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே மக்கள் முன்வைத்துள்ளனர்.   மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள், தேர்தல் முறைமை சிக்கல்கள், அடிப்படை உரிமைகள் பலப்படுத்தும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக வேண்டும் எனவும் பொதுவான கருத்துகளை முன்வைத்துள்ளனர். 

மேலும் இந்த வேலைத்திட்டம் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தினுள் முழுமைப்படுத்தப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.    நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், நிபுணர்கள், மதத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து இந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளோம். அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கபட வேண்டும்.

ஆகவே மக்களின் பிரதான கோரிக்கைகளையும், அவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதையும் எமது அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் ஜனாதிபதிக்கு வெளிப்படுத்தினோம். அதேபோல் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி எம்மிடம் சில காரணிகளை முன்வைத்தார். 

குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் மேற்கொள்ளும் நிலையில் அது நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டு செல்வதாகவும், நாட்டை பிரிப்பதாகவும் அமைகின்றது என்ற கருத்தை சில தரப்பினர்  முன்வைக்கின்றனர். அதேபோல் ஒரு சிலரின் தவறான கருத்துகள் மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பும் வகையில் அமைந்துள்ளன. அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றின் அவசியத்தை இவர்கள் உணர்ந்தும் தமது சுயநல தேவைக்காக இவ்வாறான கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆகவே அவற்றை நிவர்த்திக்கும் வகையில் நிபுணர்குழு மக்கள் மத்தியில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

அதேபோல் ஐக்கிய இலங்கைக்குள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்ற  பலமான  நிலைப்பாட்டை  மக்கள் மத்தியில் பலமான உணர்வை உருவாக்க வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நாடு அரசியல் பிடியில் இருந்து விடுபட்டுள்ளது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை ஐக்கியப்படுத்தும் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.  அதற்கான வேலைத்திட்டத்தை மக்களின் கருத்தறியும் நிபுணர்குழு மேற்கொள்ள வேண்டும். 

சுயாதீனமாக செயற்படும் ஆணைக்குழுக்களை கொண்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வெகு விரைவில் இந்த பணிகளை முடிக்குமாறு ஜனாதிபதி எமக்கு வலியுறுத்தியுள்ளார் என்றார்.