சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கபிஸ்கட்களை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இலங்கை பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

50 வயதான மற்றும் 46 வயதான மற்றும் 56 வயதான  இலங்கை பிரஜைகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  சந்தேகநபர்கள் வத்தளை, மாபோல மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த வியாபாரிகளே.

குறித்த நபர்கள் இன்று காலை சிங்கப்பூரிலிருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது சந்தேக நபர்களின் பயண பையில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை தங்க பிஸ்கட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டபோது மாபொல பிரதேசத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து 1.1 கிலோகிராம் எடையுடைய 71 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெருமதியான 11 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட கோட்டை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணிடமிருந்து 300 கிராம் எடையுடைய 17 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியுடைய மூன்று தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விருவருக்கும் முறையே 5 இலட்சம் மற்றும் 20 ஆயிரம் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பண்டாரநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.