பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு ஆயுள் தண்டனையும் முன்னாள் அமைச்சர்கள் 19 பேருக்கு மரணதண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த  2004ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிரதமராக கலீதா ஜியா இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் உள்ள வங்கபந்து மைதானத்தில் பேரணி ஒன்றை நடாத்தினார்.

அப் பேரணியில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 24 பேர் பலியானதோடு 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குண்டு வெடிப்பின் பாதிப்பால் ஷேக் ஹசீனாவிற்கு கேட்கும் திறனில் குறைப்பாடு ஏற்பட்டது.

இக் குண்டு வெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் முன்னாள் உள்துறை அமைச்சர் லுத்போஸமன் மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் அப்துஸ் ஸலாம் பின்ட்டு ஆகியோர் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

இந் நிலையிலேயே கலீதா ஜியாவின் மகனுக்கு ஆயுள் தண்டனையும் அமைச்சர்கள் லுத்போஸமன் மற்றம் அப்துஸ் ஸலாம் பின்ட்டு உள்ளிட்ட 19 பேருக்கு மரணதண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கில் தாரிக் ரஹ்மானுக்கு மட்டுமன்றி கலீதா ஜியாவின் முன்னாள் அரசியல் செயலர் ஹாரிஸ் சவுத்ரி உள்ளிட்ட 19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 11 பேருக்கும் இவ் வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.