தளபதி விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் சர்கார் படத்தின் டீஸர் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீபாவளிக்கு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜய் நடித்த சர்கார் படத்தின் டீஸர் இம்மாதம் 19 ஆம் திகதியன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால் தளபதியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து சர்கார் படத்தை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ்,யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ .ஆர் .ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டீஸரில் அரசியல் வசனங்கள் இருக்கும் என்று ஒரு தரப்பினரும், ஓடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசியதால் டீஸரில் அரசியல் வசனங்கள் எதுவும் இடம்பெறாது என்று ஒரு தரப்பினரும் தகவல்களை கசியவிட்டிருக்கிறார்கள். எது உண்மை? என்பது 19 ஆம் திகதியன்று மாலை தெரிந்து விடும் என்கிறார்கள் திரையுலகினர்.