அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யாழிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடைபவனியானது கிளிநொச்சி நகரை  வந்தடைந்துள்ளது.

 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் போராட்டத்தின் முடிவில் நடைபவனிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

இந்த நிலையில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக நேற்று காலை பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி நேற்று இரவு இயக்கச்சியுடன் நிறைவுபெற்று.

  இன்று அங்கிருந்து ஆரம்பித்த நடைபவனி கிளிநொச்சி நகர்வரை சென்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்தில் மதிய நேர உணவினை முடித்துக்கொண்டு கொக்காவில் நோக்கி பயணத்தினை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த நடைபவணிக்கு கிளிநொச்சி மக்கள் இளைஞர்கள்  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.