மூன்று கரடிகளுடன் போராடி தோல்வி கண்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கடுங்காயங்களுடன் தன்னிடமுள்ள துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மொனராகலைப் பகுதியின் கரண்டுகல கிரமத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.நெல்லியத்தையைச் சேர்ந்த ரவிந்திர துசிந்த குமார என்ற 38 வயது நிரம்பிய சிவில் பாதுகாப்பு அதிகாரியே  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சிவில் பாதுகாப்பு அதிகாரி சேனைப்பியிர்ச் செய்கையை பார்வையிடச் சென்ற போது காட்டின் மத்தியில் அவரை வழி மறித்த மூன்று கரடிகள் சிவில் பாதுகாப்பு அதிகரியை தாக்கிய போது அவர் அக் கரடிகளிடமிருந்து தப்புவதற்கு பெரும் போராட்டத்தை மேற் கொண்டார். 

இப் போராட்டத்தில் அவர் தப்பிய போதிலும் கடுங்காயங்களுக்குள்ளானார்.

இக் கடுங்காயங்களினால் அவதிப்பட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் தற்கொலை செய்யுமுன்பு “ தான் கரடிகளுடன் போராடி தோல்வி கண்டுள்ளேன்.  கரடிகள் என்னைத் தாக்கியதில் ஏற்பட்ட கடும் காயங்களினால் என்னால் தொடர்ந்தும் வாழ முடியாது.

அதனாலேயே தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளேன்” என்ற வாசகங்களை கரிக் கட்டையினால் சுவரில் எழுதிய பின்பே தற்கொலை செய்துள்ளார். 

இவ் வாசகங்களை பொலிஸார், நீதிவான் நீதிபதி, மரண விசாரணை அதிகாரி அனைவரும் பார்வையிட்டு தற்கொலை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவரின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை அரசினர் மருத்துவமனை பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.

மொனராகலை பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.