(ப.பன்னீர்செல்வம்) 

நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை மற்றும் இது தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறுவர் அடங்கிய விசேட குழுவினை நியமித்துள்ளார். இக் குழுவின் அறிக்கை ஒருவாரத்துக்குள் கையளிக்கப்படவுள்ளது. 

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெ ளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடை மற்றும் அதனோடு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உட்பட வெளிக்கள நடவடிக்கைகளை ஆராய்ந்து, இது தொடர்பிலான நிலைமைகளை ஆராயந்து அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் அரசுக்கு பரிந்துரைகளை செய்வதற்காக ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இக் குழுவில் மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அமைச்சர்களான சுசில் பிரேம்ஜெயந்த, சம்பிக ரணவக, சாகல ரத்னாய மற்றும் பிரதியமைச்சர்களான எரான் விக்கிரம ரத்ன, அஜித் பீ. பெரேரா ஆகியோர் அடங்கியுள்ளனர். இக் குழுவின் முதல் அறிக்கை ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. 

மின்சாரத்துறையிலுள்ள நெருக்கடிகளை தீர்த்து, நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் அபிவிருத்தி துறைக்கு எதுவித பாரபட்டமும் இல்லாமல் தொடர்ந்து சேவையை பெற்றுக் கொடுப்பதற்கான பரிந்துரைகளும் இக் குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ளது. 

மேற்கொண்ட இக் குழுவில் 3 மாத கால  எல்லைக்குள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக மின்சாரத்துறை சார்ந்த நிபுணத்துவமிக்கவர்களை தெரிவு செய்வதற்கும் ஜனாதிபதி பரிந்துரை வழங்கியுள்ளார்.