மலையகத்தில் நீர் வளங்கள் காணப்படுகின்ற போதிலும் மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் பல தோட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

பூண்டுலோயா – மடக்கும்புர கீழ் பிரிவு தோட்டத்தில் வாழும் 85ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரே குழாயில் வரும் நீர்க்காக பாத்திரங்களுடன் காத்திருப்பது இன்று காணக்கூடியதாக உள்ளது.

இப்பகுதியில் அதிகமான ஊற்று நீர் காணப்படுகின்ற இதேவேளை சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருந்தபோதிலும் எந்த அதிகாரிகளும் இவர்களின் பிரச்சினைகளை ஏற்று இம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மலையக அரசியல்வாதிகள் தவறுவதாக இங்குள்ள மக்கள் அங்கலாகின்றனர்.

காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குடும்ப தேவைக்கு நீரை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கும் இவர்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்வது வேதனையான விடயமாகும்.

10 வருடங்களுக்கு முன்பு இங்கு அமைக்கப்பட்ட நீர் தாங்கி உடைந்து வெடிப்புற்று காணப்படுகின்றது. இதனால் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

குடியிருப்பு பகுதியில் போடப்பட்டுள்ள நீர் குழாய்கள் உடைந்து காணப்படுவதோடு நீரை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளது.

இங்குள்ள பெண்கள் தங்களின் தலையில் அதிக பாரமுடைய பிளாஸ்டிக் கேன்கள் மூலம் தலையில் தண்ணீரை சுமப்பதால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள சிறுவர்களும் தங்களின் தலையில் குடிநீரை சுமந்து வரும் அவலநிலை இங்கு தொடர்கிறது. தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கிய அரசியல் தலைமைகள் இம்மக்கள் இருக்கின்றார்களா என்பதை கூட திரும்பி பார்க்கவில்லை என இங்குள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக மலையக அரசியல் தலைமைகளிடமும் தோட்ட நிர்வாகத்திடமும் கடிதங்கள் வழங்கிய போதிலும் இக்கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை என இவர்கள் வேதனையடைவதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இத்தோட்டத்தில் 2013ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தினால் 20 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியது. 3 வருடங்கள் கடந்த போதிலும் இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஒரு சிறிய கூடாரத்தில் ஒன்று முதல் 15 பேர் வரை வாழ்ந்து வருகின்றனர். பல அரசியல்வாதிகள் வாக்குறுதி வழங்கியதையும் இங்குள்ள மக்கள் ஞாபகம்படுத்துகின்றார்கள்.

அத்தோடு இப்பகுதியில் 2 வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் அடிக்கல் நாட்டிய இடமும் கூட மறைந்து போய் காணப்படுகின்றது. இதனால் இங்கு வாழும் மக்கள் தொடர்ச்சியாக துன்பங்களை அனுபவதித்து வருகின்றனர்.

இப்பகுதியில் 3 அரசியல்வாதிகள் இருக்கின்ற போதிலும் எங்களுடைய தேவைகளை செய்து கொடுப்பதில் இழுபறியாக செயல்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இன்னும் தாமத்திக்காமல் தீயினால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் குடிநீரையும் பெற்று தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)