இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழககத்தைச் சேர்ந்த படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில் விடுவிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்ய தமிழக மீனவக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் வளங்களையும், மீன் வளத்தையும் அழித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்று ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம் மற்றும் காரைகால் மாவட்டத்தைச் சேர்ந்த 184 படகுகளை இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க விடுவிக்க இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு பரிந்துறை செய்தது.

இதனையடுத்து மன்னார், ஊர்க்காவற்றுறை, திருகோணமலை மற்றும் புததளம் ஆகிய நீதிமன்ற நீதிவான்கள் படகுகளின் வழக்கை இரத்து செய்து விடுவிக்க உத்தரவிட்டனர்.

இந் நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள்  15 பேர்  கொண்ட குழுவொன்று விடுவிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்து பின்னர் முழுமையான அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய இலங்கை வருகிறது.

தமிழக அரசுக்கு குறித்த குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் விசைபடகுகளின் உரிமையாளர்கள் கொண்ட குழு இலங்கை வந்து படகுகளை மீட்டு தமிழகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.