(ஆர்.யசி)

கருப்பு ஜூலை கலவரத்தில் தமிழர்களையும் சிங்களவர்களையும் உயிரோடு எரித்தவர்கள், படலந்த வதை முகாமை நடத்தி மக்களை சித்திரவதை செய்தவர்கள், புலிகளுடன் ஒப்பந்த செய்து நாட்டை துண்டாடியவர்கள் நல்லவர்கள். ஆனால் இந்த நாட்டில் யுத்தத்தை வெற்றிகொண்டு பயங்கரவாதத்தை முழுமையாக அழித்து நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்திய மஹிந்த ராஜபக்ஷ கெட்டவர். மக்களை தவறான பக்கம் திசைதிருப்ப அரசாங்கம் முயற்சிகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

அரசாங்கம் மேற்கொண்டுவரும் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை இந்திய பொருளாதார தொழிநுட்ப உடன்படிக்கை மூலமாக இந்த நாட்டில் மீண்டும் இந்திய ஆக்கிரமிப்பை உருவாக்கவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிகின்றது. இப்போது இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பியுள்ள உடன்படிக்கை மிகவும் சிக்கலானது. இந்தியாவின் பொருளாதரத்தை பலபடுத்தும், இந்திய பொருளாதார கொள்கையை பலப்படுத்தும் உடன்பாட்டுக்கு இணங்குவதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் எமது நாட்டின் தேசிய பொருளாதார கொள்கைக்கே பாரிய சிக்கல் நிலைமைகள் ஏற்படும். 

ஆட்சி மாற்றம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சகல மக்களும் சுமூகமான வாழ்கையை உருவாக்கிக்கொடுப்பதாகவும் இந்த நல்லாட்சி அரசாங்கம் தெரிவித்துன்வருகின்றது. ஆனால் இவர்கள் நல்லாட்சி என்ற பெயரில் மிகப்பெரிய மோசடியையும், மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டதையுமே செய்து வருகின்றனர்.