( ஆர். பிரபு ராவ் )

மண்டபம்  அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 150 கிலோ தடை செய்யப்பட்ட அரியவகை  கடல் அட்டைகளை உயிருடன்  பறிமுதல் செய்து இந்திய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் கீழக்கரை தொன்டி உள்ளிட்ட மாவட்டத்தின் கடலோரப்பகுதிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட அரியவகை கடல் அட்டை , கடல்குதிரை, கடல்சங்கு மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுவருவது அதிகரித்துள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கடலோரப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகினறனர். 

இந்நிலையில  நேற்று இரவு  கடலோர காவல் பொலிஸார் , இராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம்  பகுதியில்; ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது   வேதாளை என்ற பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டை பதுக்கிவைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 150  கிலோ கடல் அட்டைகளை உயிலுடன் பறிமுதல் செய்தனர். 

மேலும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மைதீன்காதர் மற்றும் அயூப்கான் ஆகிய  இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர் .

இது குறித்து கடலோர காவல்படை கண்காணிப்பாளர் மனோகரன் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை பார்வையிட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார் .

 பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம்  பொலிஸார் ஒப்படைத்தனர் .

ஒப்படைக்கப்பட்ட  கடல் அட்டைகளின் பெறுமதி  சுமார் மூன்று இலட்சம் ரூபா மதிப்பிலானது  என அதிகாரிகள் தெரிவித்தனர்.