பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே  பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்ற அப்ரிடியின் கருத்து தனக்கு அதிர்ச்சியும், அதிக மன வேதனையும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜாவீத் மியாண்டட் அளித்த பேட்டியில் , “ இது போன்ற கருத்துக்களை கூறியதற்காக வீரர்களே வெட்கப்பட வேண்டும். உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

இக்கருத்து குறித்து பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம்  அப்ரிடியின் கருத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதில் பாகிஸ்தானின் நலனுக்கு எதிராக உள்ளது எனவும், இக் கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்டு தனது கருத்தை அப்ரிடி திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி:- 

எனது கிரிக்கட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். எமக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பு சிறப்பானதாகும். பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே  பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள்.  கொல்கத்தாவில் விளையாடுவதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. இந்தியாவில் கிரிக்கட் விளையாடும் போது கிடைக்கும் ஆனந்தத்தை  உலகில் வேறு எங்கும் நான் அனுபவித்தது கிடையாது. 

அப்ரிடியின் இந்த கருத்தால் பாகிஸ்தானில்  எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.