வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்தும் பாரிய சவாலை சமாளித்தவாறுதான் இன்றைய அரசு நாட்டை வழிநடத்த வேண்டியிருக்கின்றது. வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் வழிவகைகளை பற்றியெல்லாம் முன்னைய மஹிந்தவின் அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தேசிய ஓய்வூதிய தின நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபவத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.ஏ. பண்டாரநாயக்க தலைமையில் நடைபெற்றது. ஓய்வூதிய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து “வாழ்கையில் புதிய விடியல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரமத அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே,

 2015 ஜனவரியில் இன்றைய அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்ற போது இருந்த கடன்சுமையும், பொருளாதார நெருக்கடியிலும் நாடு சிக்கிக் காணப்பட்டது. கடந்த அரசாங்கம் பெற்ற கடனுக்கு வட்டியினை செலுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. 

இருந்தும் கூட தற்போதைய அரசாங்கத்தின் விடாமுயற்சியின் காரணமாக பெற்ற கடனுக்கு வட்டியினை செலுத்தும் அளவுக்கு நாங்கள் முன்னேறியுள்ளதுடன், விவசாயிகளுக்கான உரமானியம், சமுர்த்திக் கொடுப்பனவு, வீதி அபிவிருத்திப் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கத்திடம் தற்போது போதிய நிதியில்லை.

இலங்கையின் சனத்தொகையில் பெரும்பங்கு முதியோர்களாக காணப்படுவது அரசாங்கத்திற்கு மட்டுமன்றி பொதுவாக சமூகத்திற்கே பெரும் சவாலாகும். இச்சவாலினை எதிர்கொள்ள எந்த அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை. 

இலங்கையில் 60 வயதுடையோர்களின் சனத்தொகை 12.2 வீதமாக காணப்படுகின்றது. முதியோர் தொகை 2,468,329 ஆக காணப்படுகின்றது. இன்று நாடு பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. பாரிய கடன்சுமை தாங்கிக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சிரேஷ்ட பிரஜைகள் நாட்டிலே அதிகரித்து காணப்படுவது நாட்டிற்கு பாரிய சவாலாகும்.

இன்று தேசிய ஓய்வூதிய தினமாகும். அரச சேவைக்காக தனது அறிவு, திறன் என்பவற்றை சுமார் 3 தசாப்தங்களுக்கு செலவு செய்து ஓய்வு பெற்றவர்களின் பணிகளை பாராட்டுவது இன்றைய தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதியவர்களாக கருதப்படுவதொடு 70 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் குறைந்த வருமானம்  பெறும் 4 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு அரசாங்கம் மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவொன்றினை வழங்கி வருகின்றது. இது தவிர மேலும் ஒரு இலட்சம் நபர்கள் இந்த கொடுப்பனவை பெற எதிர்ப்பார்த்துள்ளனர். 

நாட்டிற்காக தமது பொறுப்பை நிறைவேற்றி வயதிபமடைந்த அவர்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். முதியோர் கொடுப்பனவு வழங்கியதன் மூலம் நாம் செய்ய வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றி விட்டதாக திருப்தி கொள்ள முடியாது. 

அதிகரித்து வரும் முதியோர்களின் தொகைகேற்ப அதனை எதிர்கொள்ள எந்த அரசாங்கத்திடமும் முறையாக திட்டங்கள் காணப்படுவதில்லை. 

அன்று அரச சேவையில் 3 இலட்சம் அரச ஊழியர்கள் காணப்பட்டார்கள் அவர்களினால் சிறந்த சேவையினை வழங்கினார்கள் ஆனால் இன்று 16 இலட்சம் அரச ஊழியர்கள் சேவையாற்றுகின்றார்கள் அந்த காலத்தில் ஏற்பட்ட துரித சேவை தற்காலத்தில் இடம்பெறவில்லை. 

சிரேஷ்ட பிரஜைகள் வாழ்வின் இறுதிக்காலத்தை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு தேவையான மனநிலையையும், பின்னணியையும் உருவாக்குவது எமது அமைச்சின் பணியாகும். 

அதற்கான முதியோர் சங்கங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்துடன், சிரேஷ்ட பிரஜைகளை மிகவும் சிறந்த பாதுகாப்பையும் கொண்ட கௌரவமான சமூகமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். என்றார்.

குறித்த நிகழ்வுக்கு பிரதியமைச்சர் அனோமா கமகே, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், ஓய்வூதிய திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரவீந்திர விஜயநாயக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்,  பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண ஓய்வூதிய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், ஓய்வூதிய சங்கப் பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன், பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.