தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று தோட்டத் தொழிலாளர்கள் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், பத்தனை திம்புள்ள தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் சுமார் 300ற்கும் மேற்பட்டவர்கள் சம்பள உயர்வு வேண்டும் என கோரி தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள சந்தியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கறுப்பு கொடியை ஏந்தியும், சுலோகங்களை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறு சுமார் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத் தருவதாக கூறிய தொழிற்சங்க சம்மேளம் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி, 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத் தரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

மக்களுக்கு நன்மை செய்வதாக வாக்குறுதிளித்த இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், ஏமாற்றப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

காலம் தாழ்த்தப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதை இனிமேலும் பொருத்துக்கொள்ள முடியாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்