வர்த்தக தடைகளை வெற்றிகரமாகத் தாண்ட முடியுமாயின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான ஏற்றுமதிகளை இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரிப்பதற்கான சாத்தியம் இலங்கைக்கு உண்டென உலகவங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேலும் வர்த்தக தடைகளை வெற்றிகரமாகத் தாண்ட முடியுமாயின் தெற்காசிய பிராந்தியத்திற்குள்ளான வர்த்தகத்தை 23 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க முடியும்.

பிராந்தியத்திற்குள் அதிகரிக்கின்ற வர்த்தகமானது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் பல்விதமானமான பொருட்கள் மற்றும் சேவைகளை அதிகமான அளவில் கிடைக்க வழிகோலும் என்பதுடன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் உள்ளீடுகளை மேலும் சிறப்பாகப் பெற்றுக்கொள்ளவும் அதிகரித்த முதலீடு மற்றும் ஏற்றுமதி பல்வகைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கும் வழிகோலும். உலகில் மிகவேகமாக வளர்ச்சிகண்டுவரும் பிராந்தியமாக தெற்காசியா விளங்குகின்றது. 

அத்தோடு உலகில் மிகக் குறைவாக ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியமாகவும் அது விளங்குகின்றது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வர்த்தகத் தடைகளானது சர்வதேச இணைப்பை பாதித்துள்ளதுடன் தெற்காசிய நாடுகள் அவை அடையக்கூடிய உயர்ந்தபட்ச சாத்தியக்கூறுகளை அடைவதைத் தடுத்துள்ளன. 

கிழக்காசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் இடம்பெறும் 50 வீதமான வர்த்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது தெற்காசியாவிற்குள் இடம்பெறுகின்ற வர்த்தகமானது வெறுமனே 5 சதவீதம் மாத்திரமேயாகும். தெற்காசியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி உலகளாவிய ரீதியான அதன் ஏற்றுமதியில் வெறுமனே 11 சதவீதமாகும்.

இன்று (08-10-2018) வெளியிட்டு வைக்கப்பட்ட “பாதி நிறைந்த கண்ணாடிப் பாத்திரம் : தெற்காசியாவில் பிராந்திய வர்த்தகத்திற்கான நல்வாய்ப்புக்கள்“ என்ற அறிக்கை எல்லைப் பகுதியில் காணப்படும் வரித் திரிபுகள் ,தீர்வையற்ற தடைகள் , இணைப்பிற்கான செலவுகள் மற்றும் நம்பிக்கைப் பற்றாக்குறை ஆகிய பிராந்திய வர்த்தகத்திற்கு காணப்படுகின்ற நான்கு முக்கியமான தடைகளை கோடிட்டுக்காண்பிப்பதுடன் அவற்றிற்கு தீர்வுகாண்பதற்கான வழிவகைகளை கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குகின்றது.

மேலும் அதிகமாக ஒருங்கிணைக்கப்பட்ட தெற்காசியாவிற்கு கிடைக்கக் கூடிய பொதுவான நன்மைகளையும் இந்த அறிக்கை கணக்கிட்டுள்ளது. உதாரணமாக தெற்காசியாவிற்கான இலங்கையின் ஏற்றுதிகளின் தற்போதைய உண்மையான பெறுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது ஆனாலும் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த இரண்டு நிலைமைகளுக்கும் இடையே காணப்படுகின்ற 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடைவெளியானது உலகளாவிய ரீதியான இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 15 சதவீதமான தொகைக்கு சமனானதாகும். இந்த இடைவெளியை நிரப்புவதானது இலங்கையின் வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி அதனைப் பல்வகைப் படுத்துவதற்கும் உதவும்.

“வர்த்தகத் தடைகளை அகற்றி மேம்பட்ட இணைப்புக்காக முதலீடுசெய்யுமிடத்து இலங்கை நிதியியல் ரீதியாக நன்மைபெற முடியும் என்பதுடன் அதன் சேவைத்துறையையும் மனித வளங்களையும் மேம்படுத்த முடியும் என்பதற்கு சான்றுகள் உள்ளன“ என இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் கலாநிதி ஐடா ஸ்வராய் ரிடிகொவ் தெரிவித்தார்.

தீர்வைகளுக்கு மேலதீகமாக விமான நிலைய துறைமுக அபிவிருத்தி வரிகள் மற்றும் செஸ் வரி போன்ற துணைத் தீர்வைகள் ஏற்றுமதிகளுக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்குகின்றன. துணைத் தீர்வைகள் இலங்கையில் சராசரியாகக் காணப்படும் இறக்குமதிக்கான தீர்வைகளை இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக்குகின்றன. மேலும் 44 சதவீதமான இலங்கையின் இறக்குமதிகளுக்கு தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் சலுகைகள் வழங்கப்படவில்லை. 

அதேபோன்று இலங்கையின் 23 சதவீதமான ஏற்றுமதிகளும் சலுமைகள் அற்ற நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளன. தீர்வைகள் அற்ற நடவடிக்கைகள் இறக்குமதிச் செலவீனத்தை மேலும் அதிகரிக்கின்றது. தெற்காசியாவில் காணப்படுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட விமானத் தொடர்புகளும் வர்த்தகத்திற்கான குறிப்பாக சேவைகளுக்கான செலவீனத்தை அதிகரிக்கின்றது. 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமானச் சேவைகள் தாராளமயமாக்கப்பட்டமை இதில் ஒரு வெற்றிக் கதையாக அமைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதலாக இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகரிக்கப்பட்ட விமானத் தொடர்புகள் செலவீனத்தைக் குறைத்துள்ளதுடன் அதிகளவான பயணிகள் போக்குவரத்திற்கும் விமானப் பொருட்களின் அளவு அதிகரிப்பிற்கும் வழிகோலியுள்ளது. தற்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையியே வாரந்தம் 147 விமானங்கள் சேவையில் ஈடுபடுகின்றன. 

2005 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அதிகளவில் வருகைதரும் சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது. இதன் விளைவாக 2005 ஆம் ஆண்டில் 113,323 காணப்பட்ட இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 356,729 ஆக அதிகரித்துள்ளது.

“இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் தாராளமயமாக்கல் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளுக்கான முக்கியமான உதாரணமாக விளங்குகின்றது“ என உலக வங்கியின் முதன்மை பொருளியலாளரும் அறிக்கையின் பிரதான எழுத்தாளருமான சஞ்ஜய் கதுரியா தெரிவித்தார்.

“பிராந்தியத்தின் சிக்கலான வரலாறு அளவில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நம்பிக்கை பற்றாக்குறை ஆகியன படிப்படியாக கொள்கை மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காண்பிக்கின்றன.’

இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் , தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படைக்கையின் உணர்வுபூர்வமான பட்டியல்கள் மற்றும் துணைத் தீர்வைகள் ஆகியவற்றை இலக்கு வைத்துள்ளதுடன் அதனை நோக்கிய உண்மையான முன்னேற்றத்திற்கு வழிகோலுகின்றன. தீர்வையற்ற தடைகள் தகவல் ஊடுகடத்தப்படல் மீதான அவதானம் , செயன்முறைகள் மற்றும் உட்கட்டுமானம் போன்றவற்றவற்றில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வுகாண்பதற்கு பன்முகப்படுத்தப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இந்த அறிக்கை கோரிநிற்கின்றது.