நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை தந்துகொண்டிருக் கும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மடோனா நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் (காகபோ) படம் அதிக எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த வெள்ளியன்று வெளியானது. நானும் ரெளடிதான், சேதுபதி என இரண்டு ஹிட் திரைப்படங்களுக்குப் பிறகு வெளிவந்த விஜய் சேதுபதியின் திரைப்படம் என்பதால் ஹட்ரிக் வெற்றியை அவர் தொடுவாரா என்கிற ஆவல் உருவாகியிருந்தது. 327 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருந்தது.

காதல் படம் என்பதாலும் டிரெய்லர்கள் அட்டகாசமாக அமைந்ததாலும் முதல்நாளே பலத்த வரவேற்பு கிடைத்தது. அன்றைய தினம் மட்டும் 2.55 கோடி ரூபா வசூல் கிடைத்தது. முதல் நாள் முதலே திரைப்படத்துக்குச் சாதகமான விமர்சனங்கள் வெளிவந்ததால் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி, வசூலிலும் சாதனை செய்து வருகிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு என முதல் மூன்று நாட்களில் 7.50 கோடி ரூபா வசூல் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 60 இலட்சம் ரூபாவை ஈட்டியுள்ளது. இதனால் விஜய் சேதுபதி படங்களில் அதிகம் வசூலான திரைப்படம் என்கிற பெருமையை காதலும் கடந்து போகும் தட்டிச் சென்றுள்ளது.