(எம்.சி.நஜிமுதீன்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன்  இவ்விவகாரம் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில்  கூட்டு எதிர்க்ட்சி எதிர்வரும் செவ்வாய்க் கிழமை கூடி முக்கிய தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக அவ்வெதிர்க்கட்சியை மையப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதினைந்து பேர் அணியே இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது. 

சிறிது காலத்திற்கு இடைக்கால அரசாங்கம் அமைத்துச் செயற்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடத்தி மக்களின் ஆணையைப்பெற்று ஸ்திரமான ஆட்சியமைப்பதனை இலக்காகக் கொண்டே இடைக்கால அரசாங்கத்திற்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்து பேசப்படுகிறது.

 எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்குமிடையில் இதுவரையில் இரகசிய உடன்படிக்கைகள் ஏதும் இல்லை. 

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுமாக இருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சியை முன்னெடுக்கும் வரையில் அந்தக் கட்சியுடன் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் செல்லப்போவதில்லையெனத் தெரிவித்தார்.