அமெரிக்காவின் வெளிநாட்டு தனியார் முதலீட்டுக் கூட்டுத்தாபனம் இலங்கையில் 118 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளது. 

இலங்கையின் ஆடை உற்பத்தி ஏற்றுமதிக்கான வாய்ப்பளிக்கும் பாரிய சந்தையாக ஐக்கிய அமெரிக்க உள்ளது. 

அதேபோல் விவசாய உற்பத்திகள், மென்பொருள் உற்பத்திகள் போன்றவற்றின் இலங்கைக்கான இறக்குமதியினை அதிகரிப்பதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவினை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான அதிகாரி ரொபட் ஹில்டன் தெரிவித்தார்.

வெளிநாட்டு தனியார் முதலீட்டுக் கூட்டுத்தாபனத்தின் உபதலைவர் டேவிட் போஹிஜியன் மற்றும் அமெரிக்க அரச பிரதிநிதிகள் கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்தனர். 

இவ்விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பிராந்திய நாடுகளில் முதலீட்டினை அதிகரிப்பதற்கும், ஒத்துழைப்பினை வலுப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் உறுதிப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே மேற்குறிப்பிட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். 

அவர்கள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினை சந்தித்ததுடன், இலங்கை சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க வணிகர்களுடனும் சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்து – பசுபிக் பிராந்தியத்தில் வலுவானதும், சமத்துவமானதுமான வணிக நடவடிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதுடன், இலங்கைக்கான விஜயமும் அதனை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது. 

மேலும் இலங்கையிலுள்ள அமெரிக்க கம்பனிகளுக்குக்கான டென்டர் வழங்கல்களின் போது நியாயமான வழங்கல் முறையினை உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு இலங்கையின் ஆடை உற்பத்தி ஏற்றுமதிக்கான பாரிய சந்தையாக அமெரிக்க உள்ளது. 

அதேபோல் இலங்கைக்கான விவசாய உற்பத்திகள் மற்றும் மென்பொருள் உற்பத்திகளின் இறக்குமதியினை அதிகரிக்க அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

மேலும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மிக முக்கியமான கேந்திர மையமாக இலங்கை உள்ளதுடன், வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் உள்ளது. 

அவ்வகையில் துறைமுகம் மற்றும் உட்கட்டமைப்பு மிதான முதலீட்டுக்கான புதிய வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்வது தொடர்பில் இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதுடன், அதன்மூலம் நிலைபேறான அபிவிருத்தியினை அடைந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.