ஜோதிகா நடிப்பில் தயாராகி வரும் காற்றின் மொழி என்ற படத்தின் வெளியீடு தீபாவளிக்கு பிறகு இருக்கும் என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்திருக்கிறார்.

நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் காற்றின் மொழி, இந்த படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ராதா மோகன். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இம்மாதம் 18 ஆம் திகதியன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போது இப்படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திகதியில் வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவிக்கையில்,‘

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக்கட்டியிருப்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் வெளியாகும். படத்தின் புதிய வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும்.’ என்று தெரிவித்தார்.

ஏ. ஆ. ரஹ்மானின் உறவினரான ஏ. ஹெச் காஷிப் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.