(எம்.எம்.மின்ஹாஜ்)

குறுகிய காலத்திற்குள் மூன்றாவது தடவையாகவும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இது மிகமவும் பாரதூரமான விடயமாகும். . இதற்கு இனிமேலும் மன்னிப்பு வழங்க முடியாது .இது குறித்தான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான தவறுகளை திருத்துவற்கு தகுந்த திட்டமிடல்கள் மின்சார சபையிடம் காணப்படவில்லை . இத்தகைய தவறுகள் மீளவும் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் நிரந்தர தீர்வுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடுபூராக நேற்று  மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து பிரதமர் நேற்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடுபூராகவும் மின்விநியோகம் தடைப்பட்டமையினால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு கவலை தெரிவிக்கின்றோம்.  குறுகிய காலத்திற்குள் மூன்றாவது தடவையாகவும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இது மிகமவும் பாரதூரமான விடயமாகும். இதற்கு இனிமேலும் மன்னிப்பு வழங்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். 

இந்த சம்பவம் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான கடுமையான தீர்மானம் எடுத்துள்ளோம். பியகம சம்பவம் தொடர்பில் பூரணமான அறிக்கை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். 

இவ்வாறான தவறுகள் மீளவும் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு திட்டமிட்டுள்ளோம்.

மின் உற்பத்தியின் போது தூர நோக்கு சிந்தனையுடன் செயற்படாதமையினால் தற்போது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. மின்வலு உற்பத்தி தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எனினும் தகுந்த திட்டமிடல்கள் மின்சார சபையிடம் காணப்படவில்லை.

மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து பொறுப்புக்குரிய தரப்பினர் அல்லது தனிநபர் தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். இதன்படி பொது மக்களுக்கு மின் விநியோகத்தை தடையின்றி வழங்குதற்கான திட்டமிடல்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்போம். அதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம் என்றார்.