இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 'மகிழ்ச்சியான கல்வி' எனும் செயற்றிட்டத்தை இலங்கையிலும் உருவாக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் குரு பிரதீபா பிரபா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

மகிழ்ச்சியான கல்வி என்பது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் கல்வியின் மூலமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே மகிழ்ச்சியான கல்வி என்பதன் மூலமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

இது  மிகவும் சிறந்த ஒரு திட்டமாக இருக்கும் என நான் கருதுகின்றேன். மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற கல்வியின் மூலமாக மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் சந்தோசமாக இல்லாவிட்டால் அந்த கல்வியின் மூலம் எந்த பயனும் கிடைக்காது. 

அத்துடன் ஆசிரியர்கள் தங்களை ஒவ்வொரு நாளும் தங்களுடைய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து புதிய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இனறைய மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் தற்பொழுது இணையத்தில் அனைத்து விடயங்களையும் தெரிந்து கொள்கின்றார்கள். எனவே அவர்களுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்து கொள்ள வேண்டும்.

சமூகத்தில் ஆசிரியர்கள் என்பவர்கள் மிகவும் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கின்றவர்கள். அவர்களுடைய அந்த அர்ப்பணிப்பான சேவை இந்த நாட்டின் எதிர்கால சந்ததியை ஒரு காத்திரமான சமூகமாக உருவாக்குவதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் என்றார்.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் மூலம் நாடு பூராகவும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 380 பேருக்கு குரு பிரதீபா பிரபா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அத்துடன் இதில் சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் 160 பேரும் அதிபர்கள் 81 பேரும் தமிழ் மொழி மூலம் 107 ஆசிரியர்களும் 32 அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.