தேசிய விஞ்ஞான மன்றத்தின் பொன்விழா நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் அரச, தனியார் மற்றும் கைத்தொழில் துறையினருக்கு தேவையான விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வு பற்றிய அறிவினை பெற்றுக்கொடுக்கும் விசேட செயற்பணியை நிறைவேற்றிவரும் தேசிய விஞ்ஞான மன்றம், விஞ்ஞானிகள், கல்வியியலாளர்கள், பட்டதாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய, சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் விஞ்ஞான ஆய்வுகள், கண்டுபிடிப்புக்கள் பற்றிய அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வெற்றிகரமான முன்னோடி அமைப்பாகவும் காணப்படுகின்றது. 

1868ஆம் ஆண்டில் முதன்முதலாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய விஞ்ஞான மன்றம், 1981ஆம் ஆண்டில் இயற்கை வளங்கள், மின்சக்தி மற்றும் விஞ்ஞான அதிகார சபையாக மாற்றப்பட்டதுடன், 1998ஆம் ஆண்டில் மீண்டும் அது தேசிய விஞ்ஞான மன்றமாக ஸ்தாபிக்கப்பட்டது. 

தேசிய விஞ்ஞான மன்றத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டி நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

விஞ்ஞான, ஆய்வுத் துறையில் விசேட சேவையாற்றிய பேராசிரியர் சீ.பி.திஸாநாயக்க மற்றும் பேராசிரியர் ஆர்.ஏ.கே.எல்.திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதியினால்  வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

அமைச்சர்களான சரத் அமுனுகம, எம்.எச்.ஏ.ஹலீம், இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன,  விஞ்ஞான, தொழில்நுட்பம், ஆய்வுகள் பற்றிய அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவி பேராசிரியர் சிறிமலி பெர்ணான்டோ, தேசிய விஞ்ஞான மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆனந்த சிறிவர்தன உள்ளிட்ட புத்திஜீவிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.