பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் குறித்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயம் வரை முன்னெடுத்தனர்.

தோட்ட தொழிலாளர்களை வழைமை போல் ஏமாற்றாமல் நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டுமெனவும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய முறையில் பேச்சுவார்த்தையினை நடத்தி ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக பெற்று தரவேண்டுமெனவும் அவ்வாறு பெற்று தராவிடின் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தயார் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஏனைய துறையினர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுக்கும் இந்த அரசாங்கம் ஏன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் புறக்கணிப்பு செய்கின்றது என தொழிலாளர்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

மலையகத்தில் உள்ள எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுத்தர முன்வர வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.