ஊழல் குற்றச்சாட்டில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் மனைவி ரோஸ்மா மன்ப்ஸார் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நஜீப் ரஸாக் கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை மலேசியாவின் பிரதமராக பதவிவகித்தார்.

ரஸாக் தனது பதவி வகித்த காலத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் அந்நிய நேரடி முதலீடுகளைக் கவர்வதற்கும் “1எம்டிபி” என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

அரசுக்குரிய குறித்த நிறுவனத்தை ரஸாக் தனது தனி கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.

இந் நிலையில் அந் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 4150 கோடி பிரதமர் ரஸாக்கின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது.

இந் நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிஸன் நெஷனல் கூட்டணி தோல்வியடைந்தது.

இதற்கிடையில் ஊழல் முறைப்பாடு தொடர்பாக ரஸாக்கின் வீட்டில் சோதனை நடாத்திய பொலிஸார் விலை உயர்ந்த ஆபரணங்களை கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து ரஸாக்கின் மனைவி ரோஸ்மா மன்ப்ஸாரிடம் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடாத்தி வந்தனர்.

இந் நிலையில் கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் ரோஸ்மா மன்ப்ஸார் நேற்று காலை ஆஜரானார்.

ஆஜரான ரோஸ்மாவிடம் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் பல மணி நேர விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் பின்னர் அதிகாரிகள் ரோஸ்மாவை கைது செய்தனர்.

ரோஸ்மா ஊழல் தடுப்பு நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.