கரும்புச் செய்கையில் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதனால், நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கை விவசாயிகள் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கல்லோயா கம்பனியே விவசாயிகளை கடனாளி ஆக்காதே, அரசே எமக்கான காணி உறுதியனை வழங்கு, அரசே விவசாயிகளை ஏமாற்றாதே, நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மையில்லாத கரும்புச் செய்கையை திணிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறுகோசமிட்டு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 5200 ஹெக்டெயர் காணியில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை தனியார் கம்பனியே முன்னெடுத்துச் செல்கின்ற அதேவேளை கரும்புச் செய்கைக்கான உள்ளீடுகள் மற்றும் உபகரண வசதிகள், கடன் வசதிகளை வழங்கி கூடுதலான வட்டியில் பன அறவீடுகளை மேற்கொண்டு வருகிறது.

தீகவாபி கண்டத்தில் சுமார் 2500 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணுவதற்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் இம்முறை அது மறுக்கப்பட்டு கரும்பு செய்கையை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும், விவசாயிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு சிறுது நேரம் அங்கு பதட்டமான நிலை தோன்றியமையும் குறிப்பிடத்தக்கது.