புதிய சுற்றுலா மையங்களை மேலும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - விக்னேஸ்வரன்

Published By: Vishnu

04 Oct, 2018 | 11:28 AM
image

புதிதாக நிர்மானிக்கப்படுகின்ற சுற்றுலா மையங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடையக் கூடிய வகையில் நவீன யுக்திகளையும் திட்டங்களையும் வகுத்து  முன்னேற்ற மன்னார் பிரதேச சபை தவிசாளரும் உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் வடக்கு மாகாண அமைச்சின் அணுசரணையில் நிர்மாணித்து அழகுபடுத்தப்பட்ட கடற்கரை பூங்கா திறப்பு விழா நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 

இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் நிதிப்பங்களிப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரைப் பூங்கா சுற்றுலா மையத்தை வைபவ ரீதியாக அமைச்சர்களுடன் இணைந்து திறந்து வைத்த பின்னர் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

வடபகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபையின் நிதிப் பங்களிப்பாக சுமார் 10 மில்லியன் ரூபாவும் மன்னார் பிரதேசசபையின் நிதிப்பங்களிப்பு ஒரு மில்லியன் ரூபாவுமாக கிட்டத்தட்ட 11 மில்லியன் ரூபா செலவில் இந்த கடற்கரைப்பூங்காவுக்கு செலவிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு ஏற்ற வகையில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கக்கூடிய சிறு குடில்கள், உடை மாற்றும் அறை, குளியல் அறை, மலசலகூட வசதி என்பவற்றுடன் சேர்த்து நிரந்தர வியாபார நிலையக் கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் கடற்கரை கிட்டத்தட்ட பாசிக்குடா கடற்பரப்பை ஒத்த தன்மைகளைக் கொண்டது. இக் கடல் அலைகளற்ற அமைதியான நீர்ப்பரப்பாக காணப்படுவதனால் இதனைப் பெண் கடல் என பொதுமக்கள் அழைப்பர். 

இலங்கையின் வடபகுதியைப் பொறுத்த வரையில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரக்கூடிய அழகிய கடற்கரைகள் இங்கு காணப்படுகின்றன. இப் பகுதிகளின் சீதோஷ்ண நிலை, கடல்நீரின் தன்மை, வெள்ளை மணல் திட்டுக்கள் போன்றவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரக்கூடியது.

அத்துடன் சுற்றுலாத் தலங்கள் கொட்டிக் கிடக்கின்றன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இருந்து இன்று வரை நிறுவப்பட்ட புராதன சின்னங்கள், கோட்டை கொத்தளங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்கள், இந்து கிறிஸ்தவ முஸ்லிம் பௌத்த வழிபாட்டுத் தலங்கள், அல்லிராணிக் கோட்டைர, முத்தரிப்புத் துறைப் பகுதியில் எமது முன்னோர்களின் முத்துக்குளிப்பு, சங்குக் குளிப்பு தொழில்களில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் என பல்வேறு சான்றுகள் இங்கு காணப்படுகின்றன.

அதேபோன்று இராமபிரான் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு வானரப்படைகளால் பாலம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இவ்வாறான பாலம் இருந்தமைக்கான புவியியல் சான்றுகள் காணப்படுவதுடன் இப் பாலத்தின் எச்சங்கள் மணல் திட்டுக்களாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இப்போதும் காணப்படுகின்றன. 

வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை அதிகரிக்கும் அதேவேளையில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறான ஹோட்டல்கள் மிகுந்த கவனத்துடன் கட்டப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை அவதானிக்க வேண்டும்.

அவற்றின் சாத்தியப்பாடுகள், தொழிலாளர்கள் தேர்வு போன்ற பலவற்றையும் ஆராய வேண்டும். மேலும் காலாதிகாலமாய் அவ்விடங்களில் வாழ்ந்து வந்தோரின் வாழ்வாதாரப் பாதிப்புக்களும் கவனத்திற்கெடுக்க வேண்டும். அவற்றில் கடமைபுரியக்கூடிய வகையில் எமது இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

மேலும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பது தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். வெறுமனே சம்பிரதாயபூர்வமாக திறப்பு விழாக்கள் இடம்பெற்ற பின்னர் அதுபற்றி கவனம் எடுக்காது இருத்தல் பயனற்றது. 

எனவே மன்னார் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இதில் கூடிய கவனம் எடுத்து இவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற சுற்றுலா மையங்கள் மென்மேலும் வளர்ச்சி அடையக் கூடிய வகையில் நீங்கள் நவீன யுக்திகளையும் திட்டங்களையும் வகுத்து இவற்றை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

சுற்றுலாத்துறை வளர்கின்ற போது அதன் உப பயனாளிகளாக அந்த இடத்தைச் சுற்றிவரவுள்ள அனைத்துக் குடும்பங்களும் வருவாய்களை பெற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. ஆகவே ஒரு சுற்றுலாத்துறை மையம் வளர்கின்றது என்றால் அந்தக் கிராமமே வளர்வதாகப்பொருள்படும். 

எனவே எமது நாட்டில் உள்ள அழகுறு கடற்கரைகள், மலை வளங்கள், கடல் உணவு வகைகள், பனம் பொருள் உற்பத்திகள், மத வழிபாட்டுத் தலங்கள், புராதனச் சின்னங்கள் எனப் பலவும் சுற்றுலாத்துறையை வளம்படுத்த உதவுவன. ஆனால் இவைகள் அரசாங்கத்தின் கைகளில் முடக்கப்படுவதால் சுற்றுலாத்துறை வளரமுடியாமல் முட்டுக்கட்டைகளுடன் திண்டாடுகின்றது. 

தனியார் துறையின் அவசியம் பற்றி தற்போது அரசாங்கம் உணர்ந்து அதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இவற்றை எல்லாம் மனதில் இருத்தி நாம் சுற்றுலாத்துறை பற்றிய திட்டங்களை வகுத்து முன்நோக்கி நகர்வோமாயின் இலங்கையும் சுற்றுலாத்துறையில் மேம்பட்ட ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக அமையும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29