பெங்களூர் நகரில் ஒரே நாளில் 33 தொன்  பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள்.

பெங்களூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 பெங்களூர் மாநகராட்சி சார்பில் ‘பிளாக் ரன்’ என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூர் மாநகராட்சியுடன் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் கைகோர்த்தன.

இதில், மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உட்பட 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டதோடு, அவர்கள் குழு குழுவாக பிரிந்து நகரின் 50 இடங்களில் வீதியோரம், பூங்காக்களில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். காலை 9 மணியில் இருந்து இரவு 8.15 மணி வரை பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர்.

தண்ணீர் போத்தல்கள் உட்பட 33 தொன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதன் மூலம், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பில் முந்தைய கின்னஸ் சாதனையை பின்னுக்கு தள்ளி பெங்களூர் மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து, பெங்களூர் மாநகராட்சி ஆளுநர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில்,

 ‘பெங்களூர்வில் 12 மணி நேரத்துக்குள் 33 ஆயிரத்து 495 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இது கின்னஸ் சாதனைக்கு தகுதியானது. இதற்கு முன்பு 12 மணி நேரத்தில் 28.5 தொன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்ததே சாதனையாக உள்ளது’ என்றார்.