கைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன்ன நேற்று  வாழைச்சேனை காகித ஆலைக்கு நேரடி விஜயமொன்றை  மேற்கொண்டிருந்தார்.தற்போது செயல் இழந்து காணப்படும் காகித ஆலையினை மீண்டும் செயல்ப்பட வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் அளவில் காகித ஆலையினை இயக்குவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்

நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ற முறையில் முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒழுங்கான முறையில் இந் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பிரதியமைச்சர் காகித ஆலையின் உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் தற்போதைய ஆலையின் நிலவரம் குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வாழைச்சேனை காகித ஆலையானது 1955 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது காகித உற்பத்தியினை மேற்கொண்டிருந்தது. 

அக்காலப் பகுதியில் நிரந்தர ஊழியர்கள் 1800 பேர்களும் அமைய அடிப்படையிலான ஊழியர்கள் 2000 பேர்கள் வரையிலும் தொழில் வாய்ப்பினை பெற்றிருந்தனர்.

2014 ஆண்டு வரை  வழமையான முறையில் இயங்கி வந்த ஆலையானது மின்சார சபைக்கு மின் கட்டணம் செலுத்தத் தவறியதால் மின்சார சபையானது காகித ஆலைக்கு வழங்கி வந்த மின்சாரத்தினை துண்டித்தது. 

இதனால் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலையில் கடமையாற்றிய ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்ட்டது.இதன் காரணமாக ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் ஆலை நிர்வாகம் சிரமங்களை எதிர்நோக்கி வந்தது. 

இந் நிலையில் ஊழியர்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குறித்து தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டனர்.

இதன்போது 2016 ஆம் ஆண்டு ஊழியர்களுக்கான சுயவிருப்பம் அடிப்படையில் இளைப்பாறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் ஊழியர்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டனர். அமைய ஊழியர்கின் சம்பள நிலுவைகளும் ஏனைய நிலுவைக் கொடுப்பனவுகளும் மற்றும் சுய விருப்பில் ஓய்வு பெறும் போது கிடைக்க வேண்டிய ஊழிய சேமலாப நிதி இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஏற்கனவே சுய வருப்பின் பேரில் பல தடவைகள் ஓய்வு பெற்ற ஊழியர்கக்கு சகல கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசே இதனை வழங்கவில்லையென ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை அமைய ஊழியர்களுக்கு சில மாதங்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள்  வழங்க்ப்பாடவிலலை.

தற்போது வாழைச்சேனை காகித ஆலையானது கடந்த 2 வருட காலமாக உற்பத்தி நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் ஆலையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு கைத்தொழில் அமைச்சினால் பராமரிக்கப்பட்டு வருகிறது.