(எம்.ஆர்.எம்.வஸீம்)

வழக்குகள் பிற்போடப்படுவது தொடர்பில் எங்களால் திருப்தியடைய முடியாது. ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

28 ஆவது தேசிய இணக்க தினம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இற்றைக்கு 28வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இணக்க முறைமை ஊடாக பாரிய சேவை இடம்பெற்றுவருவது தொடர்பில் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தை நாடவேண்டி ஏற்பட்டால்  சமூகத்துக்குள் எவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது. 

இன்று நீதிமன்றங்களில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியுள்ளன. இதுதொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தவேண்டும். வழக்குகள் பிற்போடப்படுவது தொடர்பில் எங்ளால் மகிழ்ச்சியடைய முடியாது. நாட்டிலுள்ள 331 பிரதேச செயலகங்களிலும் பிரச்சினை ஏற்பட்டால் வழக்குகள் பிற்படுவதன் ஊடாக பல்வேறு துன்பங்களுக்கு மக்கள் ஆளாகுவார்கள் என்றார்.