இன்று எம்மில் பலரும் வடிவான தோற்றத்துடன் உலா வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் கொழுப்பு கூடி எடை அதிகரித்துவிடுவதால் வடிவான பொலிவு கிடைப்பதில்லை. 

பலர் இதற்காக ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடுடன் தவம் இருப்பர். ஆனால் எங்கேனும் ஒரு பகுதியில் கொழுப்பு செல்கள் இருந்து நாம் விரும்பிய அழகான தோற்றத்திற்கு தடையாக இருந்து கொண்டேயிருக்கும்.

இவர்களுக்கு தற்போது கூல்ஸ்கல்ப்டிங் என்ற புதிய சத்திர சிகிச்சையற்ற வைத்திய தொழிநுட்பம் அறிமுகமாகியிருக்கிறது. 

இத்தகைய சிகிச்சையின் போது, உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்பு செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்குவார்கள். 

‘கூல்ஸ்கல்ப்டிங் ’என்ற கொழுப்பு செல்களை உறையவைத்து, உடல் எடையை குறைய வைக்கும் இந்த  நவீன வைத்திய தொழில்நுட்ப சிகிச்சையை உலகத்தின் முன்னணி உணவு மற்றும் மருந்திற்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எஃப். டி. ஏ (F. D. A)எனும் சர்வதேச அமைப்பு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்திருக்கிறது.

முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களுக்கு கூட, அவர்களின் உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு செல்களை அகற்றும், அறுவை சிகிச்சையற்ற இந்த வைத்திய நடைமுறை பாதுகாப்பானது மற்றும் முழுமையான பலனைத்தரக்கூடியது என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

கூல்ஸ்கல்ப்டிங் என்றால் என்ன?

கூல்ஸ்கல்ப்டிங் என்பது அழகிய உடலமைப்பை பெறுவதற்கான சிறப்பு சிகிச்சையாகும். இது அறுவை சிகிச்சையற்றது. வைத்திய ரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறை. உடலில் தங்கியிருக்கும் விரும்பத்தகாத கொழுப்புச் செல்களை உறைய வைத்து அகற்றும் சிகிச்சை அல்லது செயலிழக்கச் செய்யும் சிகிச்சை. 

கிரையோலிபாலிஸிஸ் என்ற உறைய வைக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கொழுப்பு செல்களை உறைய வைப்பதற்கும், குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து அதனை அழிப்பதற்கும், பின் அருகிலிருக்கும் திசுக்களை பாதிக்காமல் அதனை வெளியேற்றுவதற்கும் இந்த வைத்திய உத்தி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய செல்கள் ஒரு முறை இறந்துவிட்டால் அவை உடலைவிட்டு இயல்பாகவே வெளியேறிவிடும்.

கொழுப்பு செல்களை நீக்கும் செயல்முறை இது. நம் உடலில் கொழுப்பு செல்கள் தேவையான அளவிற்கு நிரந்தரமாக இருக்கும். நாம் எடையை அதிகரிக்கும் போது இவ்வகையான செல்கள் கூடுதலாக அதிகரிக்காது. ஏற்கனவே இருக்கும் செல்கள் பெரியதாகிவிடும். இந்நிலையில் இந்த பெரிதாகி போன செல்கள் சுருக்கமடையச் செய்தால், உடல் எடை குறையும். அழகிய உடலமைப்புப் பெறுவதற்கான கூல்ஸ்கல்ப்டிங் என்ற சிகிச்சையைப் பெறும் போது, இந்த சிகிச்சையைப் பெறுபவர்களின் எண்ணத்திற்கேற்ப உடலமைப்பைப் பெற இயலும்.

டொக்டர் சேதுராமன்

தொகுப்பு அனுஷா.