சபரிமலை தரிசனத்தின் போது பெண்கள் தனி வரிசையில் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று தரிசனம் மேற்கொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

இந் நிலையில் குறித்த கோவிலுக்கு பெண்கள் தரிசனம் மேற்கொள்ள செல்லும்போது தமக்கென தனி வரிசை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரள அரசாங்கம் அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.

இது குறித்து கேரள தேவஸ்தான நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், சபரிமலைக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள 8 முதல் 10 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தான் ஆக வேண்டும். அங்கு பெண்களுக்கு தனி வரிசை வழங்கப்படுவது என்பது சாத்தியமாகாது. ஆகையினால் அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய நினைக்கும் பெண்கள் மாத்திரம் வர வேண்டும்.

அத்துடன் பெண்களுக்கென்று தனி வரிசை கொடுத்தால், அவர்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுவார்கள். இதனால் பல பிரச்சினைகள் தோன்றலாம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தேவஸ்தான நிர்வாகத்தினரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அதன்படி சபரிமலை தரிசனத்துக்கு வருகை  தரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.