இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டித் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இதில் முதலாவதாக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரானது இந்தியாவுக்கு முக்கியமான ஒரு தொடராக அமைந்துள்ளது. 

அதாவது டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும் (115 புள்ளி), தென்ஆப்பிரிக்கா  இரண்டாவது இடத்திலும் (106 புள்ளி), அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் (106 புள்ளி) உள்ளன. அத்துடன் பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும் (88 புள்ளி), மேற்கிந்தியத்தீவு 8 ஆவது இடத்திலும் (77 புள்ளி) உள்ளன.

இந் நிலையில் மேற்கிந்தியத் தீவுக்கு எதிரான இத் தொடரை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றினால் ஒரு புள்ளி அதிகரித்து 116 புள்ளிகளை பெறும். 1:0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றால் ஒரு புள்ளி குறைவடையும். அவ்வாறு இல்லாமல் தொடர் சமநிலையில் முடிவடைந்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 112 ஆக குறைவடையும். முதல் இடத்திற்கு பாதிப்பு வராது.

அதேவேளை மேற்கிந்தியத் தீவுகள் அணி இத் தொடரை 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 108 ஆக குறைவடையும். அவ்வாறு இடம்பெற்றால் இந்திய அணியின் முதல் இடத்திற்கு பாதிப்பு ஏற்படும். 

காரணம் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் 106 புள்ளிகளுடன் இருக்கும் அவுஸ்திரேலியா அணி தொடரை 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டினால் அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 109 ஆக உயர்ந்து, இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்கும்.

எனவே இந்திய அணி இத் தொடரில் முதலிடத்தை தக்கவைக்கும் நோக்குடன் களமிறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.