பங்களாதேஷில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணி தான் எதிர்கொண்டு மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

அதன்படி கடந்த 29 ஆம் திகதி தான் எதிர்கொண்ட லீக் சுற்றின் முதலாவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் வீழ்த்தி வெற்றயீட்டியது. அதையடுத்து இலங்கை அணி எதிர்கொண்ட லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹொங்கொங்கை வீழ்த்தி இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது.

இந் நிலையில் லீக் சுற்றின் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணியை பணித்தது. இதற்கிணங்க முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 200 ஓட்டங்களை பெற்றது. 

201 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

இந்த மூன்று வெற்றிகளுடன் இலங்கை அணி, 6 புள்ளிகளை பெற்று குழு B யில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் குழு A யில் இந்திய அணியும் அரையிறுக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.