பூசா, மகசீன், களுத்துறை, அனுராதபுரம் சிறைகளில் கைதியாகவிருந்த கோமகனின் கதை

Published By: Vishnu

03 Oct, 2018 | 10:27 AM
image

இலங்கையில் உள்ள பூசா, மகசீன், களுத்துறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாண சிறைச்சாலைகளில் 6 வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முருகையா கோமகன் தனது கைதி வாழ்க்கையில் கடந்து வந்த அனுபங்களை வீரகேசரியுடன் பகிர்ந்து கொள்ளுகின்றார்.

2010 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 23 ஆம் திகதி அன்று காலை 10 மணியிருக்கும் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள எனது வீட்டிற்குள் நான் இருக்கின்றேன். என் வீட்டின் வாசலில் முன்பின் பாத்திராத முகங்கள் பல.

நான் மாநாகர சபை உறுப்பினராக இருந்த காரணத்தால் என்னை சந்திப்பதற்கு யாரும் வந்தார்களோ ? என்று என்னி அவர்களை உற்று நேக்கினேன். அவர்களின் முகங்களோ அவர்கள் எமது சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை காட்டுகின்றது.

தங்கு தடையின்றி உள்ளே வந்த அந்த புதிய முகத்தவர்கள் தங்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். டக்ளஸ் தேவானந்தாவின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி என்னை அவர்களுடனேயே கூட்டிச் சென்றுவிட்டார்கள்.

என்னை ஏற்றிய வாகனம் வவுனியா வரை சென்று அங்கு ஜோசப் முகாமில் நின்றது. அங்கு ஒரு நாள் வைத்து விசாரணை செய்தார்கள். மறுநாள் கொழும்பிலுள்ள 4 ஆம் மாடிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.

வழக்கெதுவும்  தாக்கல் செய்யப்படாமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேல் என்னை விசாரணை என்ற பெயரில் செய்யாத சித்திரவதைகள் எல்லாவற்றையும் செய்தார்கள்.

2011 ஆம் ஆண்டு இறுதியில் எனக்கெதிரான வழக்கு 2 நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறி ஒரு வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டு கொழும்பு வெள்ளவத்தையில் கருணா குழு நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்திருந்தனர். இத்தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மற்றைய வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த போது அவர் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டே நான் கைது செய்யப்பட்டிருந்தேன்.

கைது செய்யப்பட்ட முதல்நாள் யோசப் காம்பில் வைத்து ஒரு நாள் விசாரணை நடந்தது. அதனை முடித்துக் கொண்டு கொழும்பு 4 ஆம் மாடிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அங்கு தனிச்சிறையில் அடைக்கப்பட்டேன். விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரி அடித்தார்கள். கைவிலங்குகளை போட்டுவிட்டு காலால் அடித்து விழுத்தி, சப்பாத்துக் காலால் மிதித்தார்கள்.

இந்த சித்திரவதைகளையெல்லாம் செய்துவிட்டு என்னிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளை தொடர்ந்தார்கள். சட்டப்படி வாக்குமூலம் பெறுகின்றவரின் மருத்துவ சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்றுள்ளது.

இதனால் என்னையும் வைத்தியரிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதணை அறிக்கை எடுப்பதற்கு வருமாறு பயங்காவாத குற்றத்தடுப்பு பொலிஸார் கோரினார்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

கடுமையாக என்னை அச்சுறுத்தி எனது விரும்பம் இல்லாமல் வைத்தியரிடம் என்னை கூட்டிச் சென்றார்கள். அங்கிருந்த வைத்தியர் மருத்துவ பரிசோரனைக்குட்படுத்த சம்மதம் தெரிவிக்கின்றீர்களா? என்று என்னிடம் வினவியிருந்தார்.

இல்லை. வற்புறுத்தியே என்னை இங்கு அழைத்துவந்தார்கள் என்று வைத்தியரிடம் தெரிவித்தேன். எனது மருத்துவ பரிசோதனை அறிக்கையின் பின்னர் மருத்துவ அறிக்கை பெற விரும்பாத நிலையில் வற்புறுத்தி எடுக்கப்பட்ட அறிக்கை இது என்று எழுதித் தருமாறு கேட்டிருந்தார். அதன்படி மருத்துவ அறிக்கையின் பின் எனது நிலைப்பாட்டை எழுதியிருந்தேன். இந்த சித்திரவதைகளை செய்தவர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னிடம் வாக்குமூலம் பெறுவதற்கான கொழும்பு நீதிமன்றத்திற்கு கூட்டிச் சென்றனர். அங்கு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது நீதிவான் சில விளக்கங்களை எனக்கு சொல்லியிருந்தார்.

இங்கு கொடுக்கும் வாக்குமூலம் உமக்கு எதிரானதாக திரும்பும் வாய்ப்பும் உள்ளது. இதனால் நீர் சுய விருப்பத்துடன் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.

வேறு ஒருவருடைய வற்புறுத்தலின் பேரில் வாக்குமூலம் பதிவு செய்யப்படக் கூடாது என்று கூறி அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் எனக்கு தெரிவித்தார்.

நான் விரும்பி வரவில்லை என்றும், குற்றப் புலனாய்வு பிரிவினரே என்னை வற்புறுத்தி இங்கு கொண்டுவந்தாகவும் தெரிவித்தேன். இதனால் நீதவான் வாக்குமூல பதிவினை 14 நாட்களுக்கு தள்ளிவைத்தார்.

14 நாள் கழித்து நீதிமன்றம் சென்ற போதும் எனக்கு விருப்பம் இல்லை என்பதை தெரிவித்தேன். இதனால் என்னிடத்தில் வாக்குமூலம் பெறும் முயற்சியை கைவிட்டுவிட்டனர்.

இதன் பின்பே பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் என்னிடத்தில் பலவந்தமாக வாக்குமூலத்தை பெற எத்தனித்தனர்.

இதனால்தான் எனது வழக்கினையும் கால இழுத்தடிப்புச் செய்திருந்தார்கள். எழுதுவினைஞர் கர்ப்பம் தரித்ததை காரணம் காட்டி ஒரு வருடமாக எனது வழக்கினை விசாரணை இல்லாமல் தடுத்து வைத்திருந்தார்கள்.

ஆனால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடந்த விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற வழக்கில், என்னிடத்தில் பெறப்பட்டு மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தினை நீதிபதி நிராகரித்து வழக்கில் இருந்து என்னை விடுவித்திருந்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட அதே வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கருணா குழுவின் தாக்குதலுடன் நான் தொடர்புபட்டேன் என்ற குற்றச்சாட்டு வழக்கு நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் மீளவும் வாக்குமூலத்தை விசாரணைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதே நேரம் என் மீது மற்றுமொரு வழக்கு ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

என்னுடைய சட்டத்தரணி இலங்கையில் சட்டக் கோவைகளையும், முன்னர்  இலங்கையில் நடைபெற்ற வழக்கு விசாரணை கோவைகளையும் மன்றில் சமர்ப்பித்து, வாக்குமூலம் நிராகரிக்கப்பட்ட வழக்கினை கொண்டுநடத்த முடியாது என்று வாதிட்டிருந்தார். இது ஒரு விசித்திர வழக்கு என்றும் மன்றில் பதிவு செய்திருந்தார்.

இருப்பினும் நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளவில்லை. எனக்கு தொடர்ந்து அநீதியே இழைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இதனால் 2016 ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குள்ளேயே தொடர்ந்து 9 நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். பின்னர் உறுதிமொழிகளை நம்பி போராட்டத்தை கைவிட்டேன்.

இதன் பின்னர் கொழும்பில் விசேட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் விசாரணை செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் எனது வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது போன்று, அங்கும் எனது வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டு 6 வருடங்களின் பின்னர் நான் விடுதலை செய்யப்பட்டேன்.

பூசா முகாமில் தடுத்து வைத்திருந்த போது நடத்தப்பட்ட விசாரணைகள் முழுவதும் சித்திரவதைகளாகவே இருந்தது. மருத்துவ உதவிகள் கூட அங்கு வழங்கப்படுவதில்லை.

கொழும்பு சிறையில் இருக்கும் போது குளிப்பதற்கு கூட விட மாட்டார்கள். கழிப்பறைகளுக்கு கூட செல்ல விடமாட்டார்கள். சந்தையில் கிழங்குகளை அடுக்கி வைப்பது போன்று நெருக்கமாகவே தூங்க வேண்டும். இடவசதிகள் கூட இல்லை.

அனுராதபுரத்தில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தனியான ஒரு பகுதி உள்ளது. அங்கு இருக்கும் போது சிறிது அத்தியாவசிய வசதிகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒன்று மூன்று பரிவுகள். அதில் ஜீ,எச்,ஜே என்ற பிரிவில் மிக நீண்ட காலமாக குறிப்பாக 20 தொடக்கம் 25 வருடங்களாக தடுத்து வைத்துள்ள கைதிகள் உள்ளார்கள்.

அவர்களுடைய வழக்குகளும் வாக்குமூலங்களால் தான் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை.

பின்னர் தமிழ் அரசியல் கைதிகளின் பிரிவில் சிங்கள கைதிகளையும் கொண்டுவந்து விட்டார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் ஒன்றாக இருக்கும் போது புத்தகங்கள், பத்திரிகைகளை படித்துக் கொண்டு எமது பொழுதினை போக்கிவந்தோம். ஆனால் வேறு குற்றங்களில் கைதுசெய்யப்பட்ட சிங்கள கைதிகள் அங்கு வந்ததும் எமது பழைய நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

குறிப்பாக போதைவஸ்து வழக்குகளில் கைதானவர்கள் எங்களை விரோதிகளாக பார்க்கின்ற நிலை சிறைகளுக்குள் ஏற்பட்டது.

வெளியில் இருந்த போது கூட அவர்கள் அஞ்சி அஞ்சி போதையை பயன்படுத்தியிருந்திருப்பார்கள். ஆனால் சிறைச்சாலைக்குள் சுதந்திரமாக போதைகளை பயன்படுத்துகின்றார்கள்.

பலவிதமான போதைகள் சிறைச்சாலைக்குள் உள்ளன. கஞ்சா, குடு, பவுடர், குளிசை (மாத்திரை) போன்ற போதைகள் அங்கு உள்ளது. போதை குளிசை (மாத்திரை) உட்கொண்டுவிட்டு, இரவு முழுவதும் ஆடிக் கொண்டிருப்பார்கள்.

போதைகளை தாங்கள் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழ் அரசியல் கைதிகளையும் அதற்கு அடிமையாக்கும் நடவடிக்கையிலும் சிங்கள கைதிகள் ஈடுபட்டனர். இதன் பயனாக சில தமிழ் அரசியல் கைதிகள் சிலர் போதைக்கு அடிமையாகியும் உள்ளார்கள்.

இதைவிட மருத்துவ வசதி என்பது அடியோடு இல்லை. மருத்துவ உதவி கேட்பவர்களை, மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள கொலை, கொள்ளை குற்றங்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுடன் கொண்டு சென்று அடைத்துவிடுவார்கள்.

இவ்வாறான சித்திரவதைகள், அநீதிகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையிலேயே சிறைக்குள் இருந்து கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டங்களை நடத்துகின்றார்கள்.

சிறைக்குள் இருக்கும் எமக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் எமக்கு நன்மை தருமா? என்று சிந்திப்போம். இலங்கையின் ஆட்சி மாற்றத்தை தாண்டி இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறும் ஆட்சி மாற்றம் எமது விடுதலைக்கு வழிவகுக்குமா? ஏன்றெல்லாம் சிந்திப்போம். ஆனால் எல்லாம் ஏமாற்றத்திலேயே முடிவடையும்.

இவைதவிர உணவு தவிர்ப்பு போராட்டங்களை முடித்து வைப்பதற்கென்று வரும் தமிழ் அரசியல் வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள். ஆனால் அவை அந்த கணமே காதில் பறக்கவிடப்பட்டுவிடும்.

உலக வரலாற்றில் போர் நடைபெறுவது வழமை. அதே போன்று போர் முடிந்த பின்னர் அரசியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்கள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதும் வழமை.

இலங்கையில் தமிழ் மக்கள் நடத்திய போராட்டம் என்பது பொது விடயம். அந்த போராட்டத்தை காரணம் காட்டி அரசியல் கைதிகளாக்கப்பட்டவர்கள் போரின் பின்னராவது விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த நீதி நடைமுறை இலங்கையில் இல்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அக் கைதிகள் சிறைக்குள் இருந்தும், அவர்களுடைய உறவினர்கள் வீதியில் நின்றும் போராட வேண்டிய நிலைதான் இன்று உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04