கர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுலபமாக கடந்து விடுவார்கள். ஆனால் பலருக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் வாந்தியும் குமட்டலும் தான்.

குறிப்பிட்ட சில வாசனைகள், சில உணவுகள், சோர்வு, பதற்றம், உணர்ச்சிமிக்க வயிறு, வைட்டமின்கள் குறைபாடு ஆகிய காரணங்களாலும் கூட வாந்தியும் குமட்டலும் ஏற்படுகிறது.

குமட்டலும் வாந்தியும் அன்றாட பழக்கவழக்கங்களை வெகுவாக பாதிக்கும். எளிய சிகிச்சைகள் மற்றும் வாழும் முறையில் சில மாற்றங்களோடு கர்ப்ப காலத்தின் வாந்தியை தடுக்க உதவும் உணவுகள்:

தண்ணீர் குடியுங்கள் வாந்தி, குமட்டல் என வந்துவிட்டால் தண்ணீர் தான் சிறந்த மருந்தாக விளங்கும்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பெண்களுக்கு வாந்தியும் குமட்டலும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் உள்ள சிசுவிற்கும் இது முக்கியமாகும்.

எலுமிச்சை

கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் வாந்தியை கையாள எலுமிச்சையும் உதவும். அதன் இதமளிக்கும் வாசனை குமட்டலை குறைத்து, வாந்தியை தடுக்கும்.

கூடுதலாக வைட்டமின் சி கர்ப்பிணி பெண்களுக்கும் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் மிக நல்லதாகும்.

எலுமிச்சை ஒன்றை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனுடன் கொஞ்சம் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் குடித்து, வாந்தி மற்றும் குமட்டலை தடுத்திடுங்கள்.

வாந்தி அல்லது குமட்டல் உணர்வின் போது எலுமிச்சை துண்டுகளை முகர்ந்து கொள்ளலாம். எலுமிச்சை மிட்டாயும்கூட உதவும்

புதினா

கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்க உதவும் மூலிகைகளில் புதினாவும் ஒன்றாகும்.

புதினாவை ஒரு கப் வெந்நீரில் போட்டு, 5 - 10 நிமிடம் மூடி வைத்து வடிகட்டி அதில் சர்க்கரை (அ) தேன் கலந்து காலை எழுந்தவுடன் பருகலாம்.

சில பெண்களுக்கு புதினா வாசனை குமட்டலை தூண்டலாம். அவர்கள் இதனை தவிர்க்கவும்.

பெருஞ்சீரகம்

கர்ப்ப காலத்தின்போது செரிமானத்தை மேம்படுத்தி, வாந்தி எடுக்கும் உணர்வை குறைக்கும். கூடுதலாக வாசனை மிக்க இது வயிற்றுக்கு இதமளிக்க உதவும்

கொஞ்சம் பெருஞ்சீரகத்தை படுக்கையின் அருகில் வைத்துக்கொண்டு, குமட்டல் ஏற்படும்போது அதனை வாயில் போட்டு மெல்லவும்.

1 ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கப் வெந்நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, ஆற விட்டு வடிகட்டி, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் மெதுவாக குடிக்கவும்.

எலுமிச்சை, புதினா, பெருஞ்சீரகம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் வாந்தியை கட்டுப்படுத்தும்.