கண்டி, உடுவெல,  இபுளேதென்ன   தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட 3,56 610 ரூபா சம்பளப் பணத்தை  கொள்ளையிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்த இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தலாத்து ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களை நேற்று கண்டி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய பொழுது குறித்த இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி  நிகழ்ந்த மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் போது இபுளே தென்ன தோட்ட தொழிலாளர்காளுக்கு  வழங்குவதற்காக முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட மேற்குறிப்பிட்ட தொகை பணத்தினை உடுவெல பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் முக மூடி அணிந்து வந்து கொள்ளையிட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியினையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக தலாத்து ஓயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய முன்னெடுத்து வந்த விசாரணைக்கமைய முறையே 28 மற்றும் 39 வயதுகளுடைய ஹெரோயின் போதைப்பழக்கத்திற்கு அடிமையான குறித்த இரு சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பிலும் மற்றைய சந்தேக நபர் பாணந்துறை வாதுவ பகுதியிலும் பதுங்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில்,  பொலிஸார் கைது செய்துள்ளனார்.

கண்டி உடுவெல பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட குறித்த இரு சந்தேக நபர்களும் பணத்தை கொள்ளையிட்டுக் கொண்டு கண்டி நகரிலிருந்து கொழும்பிற்கு குளிரூட்டப்பட்ட கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.