சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மனவுலைச்சலே இந்த முடிக்கு காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். இவர், முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 

இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ளனர். சாய்பிரசாந்த், சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் மற்றும் பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாய்பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சாய்பிரசாந்த் வீட்டில் இருந்து பொலிஸார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தை அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த கடிதத்தில், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுலைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென எழுதி வைத்துள்ளார். அவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிய சாய் பிரசாந்த், நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.