திரையுலகில் இளைய தளபதியின் படம் தொடர்பான செய்திகள், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் விமர்சிக்கப்படுகின்றன. இது ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை விட, விவாதிக்கப்படுவது ஆரோக்கியமானது தான் என்கிறார்கள் விஜயின் ரசிகர்கள்.

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் தளபதி விஜய் சிகரெட் வைத்திருந்தது சர்ச்சையாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கிள் ட்ராக் வெளியானது. அதில் சிம்டாங்காரன் என்றால் என்ன? தெரியவில்லை என்பதால் விமர்சிக்கப்பட்டது. தற்போது ஒற்றை விரல் புரட்சி என்ற பாடல் வெளியானது. இதைக் கூட ரசிகர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுடன் ஒப்பிட்டு, அந்தளவிற்கு ஈர்க்கக்கூடியதாக இல்லை என்று விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால் ‘சிம்டாங்காரன்..’ என்ற பாடல், இதுவரை பதினைந்து மில்லியனையும், ‘ஒற்றைவிரல் புரட்சி..’ என்ற பாடல் ஏழு மில்லியனையும் கடந்து இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை மீதமுள்ள பாடல்களின் ஓடியோ வெளியாகவிருக்கிறது. அதனை ரசிகர்கள் எப்படி வரவேற்கப்போகிறார்களோ என்ற பதற்றம் படக்குழுவினருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மெர்சல் படத்தின் பாடல்களை கேட்டவர்கள் முதலில் ஒரு மாதிரியாகவும், படம் வெளியான பிறகு வேறு மாதிரியாகவும் வரவேற்றார்கள் என்பது வரலாறு. அந்த வகையில் சர்கார் படத்தின் பாடல்களும் தற்போது கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், படம் வெளியான பின் அந்த பாடல்களை திரையில் பார்க்கும் போது வேறு வகையில் பாராட்டுவார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.