அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ - 4 பிரதான சாலையில் அறுபதாம் கட்டை எனுமிடத்தில் கனகர் கிராம தமிழ்மக்களின் காணி மீட்புப் போராட்டம் தொடங்கி 50 தினங்களைக் கடந்துள்ளது.

இன்று  செவ்வாய்க்கிழமை 50 ஆவது தினத்தில் அங்கு விஜயம் மேற்கொண்டு சமகாலநிலைவரம் தொடர்பில் நாம் கண்ணோட்டம் செலுத்தினோம்.

நேற்றிரவு அந்தப்பகுதியில் நீண்டகாலத்திற்குப் பிறகு மழை பொழிந்திருக்கிறது. வரட்சியின் உச்சக்கட்டத் தாண்டவம் ஆடியதும் அங்குதான் . எனினும் தாம் கொட்டிலில் இருந்தாலும் மழையால் பலத்த சிரமத்திற்குள்ளானாலும் மழையை அவர்கள் பெரிதும் வரவேற்றுப்பேசியதைக் காணமுடிந்தது.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமூகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளையும்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் அரச அதிபர் கிழக்கு காணி ஆணையாளர் இக்காணியை மீளளிக்க உறுதி கூறியுள்ள நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.

அவர்கள் இரவுபகலாக அந்த காட்டுப்பகுதியின் வீதியோரத்தில் முகாமிட்டு இரவுபகலாக தங்கியிருந்து போராட்டத்தை நடாத்திவருகின்றனர். அந்தமுகாம் தற்போது இரண்டாகியுள்ளது. பால்கொடுக்கும் குழந்தைகள் தொடக்கம் தள்ளாடும் வயோதிபர்கள் வரை அங்கு பங்கேற்றுள்ளனர். அருகில் தண்ணீர் பௌசரொன்று நிறுத்தப்பட்டுள்ளது. அங்கேயே அடுப்புமூட்டி சமையல் செய்கின்றனர். இடையிடையே தேநீர் போடுகின்றனர். ஒருவகையில் சந்தோசமாக பொழுதுகழிகிறது.

அரச அதிபரின் விஜயம்!

அங்கு இறுதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாச உதவிகாணி ஆணையாளர் எஸ்.ரவிராஜன் உள்ளிட்ட குழுவினர் வந்து பார்த்து கலந்துரையாடிய விடயங்களையிட்டு மக்கள் நம்பிக்கைகொண்டவர்களாகவுள்ளனர்.

அதாவது இங்கிருக்கக்கூடிய 30 வீட்டுத் திட்டத்திலிருந்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அதனை விடுவிக்கலாம். ஆனால் அதைவிட மொத்தமாக 278 குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. அவற்றை உறுதிப்படுத்துவதற்கு சில ஆவணங்கள் தேவை. பெர்மிட் அல்லது அங்கிருந்ததற்கான பக்கத்து காணிச்சொந்தக்காரர்களின் பெர்மிட் அங்கு வாழ்ந்தபோது எடுத்த பிறப்பு, இறப்பு, விவாகச்சான்றிதழ்களின் பிரதிகள் அல்லது புனர்வாழ்வுக்காக பெற்றுக்கொண்ட கடன் உதவி சான்றிதழ் அல்லது வாக்காளர் அட்டை  இப்படி ஏதாவது ஒரு ஆவணத்தையாவது காட்டுகின்ற பட்சத்தில் அதனை பரிசீலனைசெய்து காணிவழங்க நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. 

அவர்கள் கடந்த 50 நாட்களைக்கடந்து போராடிவரும் அந்த மரக்கொட்டிலில் இருந்தே இப்பதிவு இடம்பெற்றுவருகின்றது. அவர்களிடமிருந்து பல தரவுகள் திரட்டப்பட்டுவருகின்றன. அந்த ஆவணங்கள் யாவும்  எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்பு பொத்துவில் புதிய பிரதேசசெயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கென அந்த மக்கள் மத்தியிலிருந்து 10 பேர் கொண்ட குழுவும் தெரிவுசெய்யப்பட்டு இயங்கிவருவதைக் காணக்கூடியதாயிருந்தது. இந்த ஆவணங்களை ஒப்படைக்கின்ற இறுதித் தினம் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆகும். அன்று அவற்றை பரிசீலனை செய்து வழங்கலாமென வந்த குழுவினர் கூறியிருப்பது அவர்கள் மத்தியில் பெரும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பின்புலம்!

இற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பிருந்து வாழ்ந்துவந்த தமது காணிகளைக்கோரி அந்த மக்கள் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர். 1960 களில் 278 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. 1981களில் முன்னாள்  பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2 ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்துவந்தனர்.

1990 களில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28 வருடங்களாக அங்கு  குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.

எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது.  அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன. 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக தடயங்களைக்கூறுகின்ற தொல்பொருளியலாளர்களுக்கு ஆக 28 வருடங்களுக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று கூறுவதற்கு நேரமெடுக்காது. 

அங்கிருந்த மக்கள் கருத்துகள்!

காணிமீட்புக்குழுவின்  தலைவி புஞ்சிமாத்தயா றங்கத்தனா கூறுகையில்,

எமது போராட்டம் 50 நாட்களைத்தாண்டுகின்றபோதிலும் நாம் சற்றும் மனம் தளரவில்லை. இங்கு 278 குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தோம். இந்த 60 ஆம் கட்டையில் 1238 ஏக்கர் காணியுண்டு. நாம் இங்கு கேட்பது நாம் வாழ்ந்த காணியையே தவிர வேறெவரினதுமல்ல.

இறுதியாக அம்பாறை அரச அதிபர் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் இங்கு வந்து எம்மோடு பேசி இப்பிரதேசத்தைப் பார்வையிட்டனர். அழிந்த வீடுகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

அவர்களுக்கு நல்ல பதிவு வந்துள்ளது. சட்டப்படி மிகவிரைவில் இதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளமை எமக்கு மகிழ்ச்சியையளிக்கிறது. நாம் அவர்களை நம்புகிறோம். 

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சகோதரர் சந்திரதாசகலப்பதியும் சகோதரர் உதுமாலெவ்வையும் பகிரங்கமாக தெட்டத்தெளிவாக தமது ஆதரவை நல்கியது மட்டுமல்லாமல் உடனடியாக இக்காணி விடுவிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். அவர்களை எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை என்றார்.

அங்கிருந்த 74 வயதான எம்.வடிவேல் எனும் வயோதிபர் அழுதழுது கூறுகையில்,

நானும் எனது 4 பெண்பிள்ளைகளும் இங்குதான் வாழ்ந்துவந்தோம். தற்போது பொத்துவில் குண்டுமடுவில் பலசிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றோம்.

இம்முறை எமது இந்தக்காணி கிடையாவிடின் நான் இந்த இடத்திலேயே  உயிரைவிடுவேன். யார் என்ன சொன்னாலும் எமக்கு நிரந்தரமான எழுத்துமூல தீர்வுகிடைக்கும்வரை இந்த இடத்தைவிட்டு அகலமாட்டோம். வருவது மழைக்காலம். எனவே நாம் மழைகாலத்திலும் பாதுகாப்பாக இருப்பதற்காக மேலும் புதிதாக இரு தகரக்கொட்டில்களை அமைத்துத்தந்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் ஜெயசிறிலுக்கும் பொத்துவில் உபதவிசாளர் பார்த்தீபனுக்கும் நன்றிகளைக்கூறுகின்றோம்  என்றார்.

எம். இராசா கூறுகையில்,

1960 இல் இங்கு வந்து நாம் குடியேறியதனால் இதனை 60 ஆம் கட்டை என்று கூறுவர். 1981 இல் சீதேவி எம்.சி.கனகரெத்தினம் எம்.பி. இந்த 30 வீட்டுத்திட்டத்தை ஏற்படுத்தித்தந்தார். அப்போது நாம் 276 குடும்பங்கள் சந்தோசமாக வாழ்ந்துவந்தோம்.

1990 வன்முறை யுத்தத்தின்போது நாம் இடம்பெயரநேரிட்டது. இப்போது 28வருடங்களின்  பின்பு இங்குவரமுடிந்தது. ஆனால் காணி மறுக்கப்படுவது வேதனையாகவுள்ளது. எமது காணியைத்தானே கேட்கிறோம். இறைவன் இரங்கட்டும்.

எமது போராட்டத்தின்மூலம் பலரை இனங்கண்டிருக்கிறோம். நாம் வாக்களித்தவர்கள் என்ன செய்தார்கள்? வாக்களியாதவர்கள் என்ன செய்தார்கள்? என்பதையெல்லாம்  அறிந்துகொண்டோம். யார் யார் கேட்காமலேவந்து உதவிசெய்தார்கள்? தார்மீக கடமையிருந்தும் செய்யாதவர்கள் யார்? என்பதையெல்லாம் அறிந்துள்ளோம். காலம் நேரம் வரும்  அதை அப்போது வெளிப்படுத்துவோம். என்றார்.

அங்கு அடிக்கடி விஜயம்செய்து உதவிவரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்;

பகல்பொழுதிலே இந்த பிரதான வீதியால் பயணிகள் செல்வதற்கு அஞ்சுவார்கள். காரணம் யானையின் நடமாட்டம். அப்படிப்பட்ட யானைக்காட்டிற்குள் 50 ஆவது நாளைத்தாண்டி போராட்டம் நடாத்துகிறீர்களே. இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்திறக்கவில்லையா?

இந்த யானைக்காட்டிற்குள் அந்த அதிகாரிகளின் அல்லது அரசியல்வாதிகளின் குடும்பங்கள் இருந்திருந்தால் என்ன நடக்கும்?

கடந்தகால அரசுகள் தமிழ்மக்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை. இன்றைய நல்லாட்சியாவது எதையாவது செய்யும் என இன்னும் நம்புகிறோம்.பொறுத்திருப்போம்.

இந்த நாட்டில் தமிழ்மக்கள் பாவம் செய்தவர்கள். முக்கிய தினங்களில் கூட தமது உரிமைக்காகப் போராடவேண்டிய துர்ப்பாக்கியநிலை. தமிழருக்கு சிறுவர் வயோதிபர் தினங்களிலும் போராடும் அவலத்தை இங்கு காண்கிறேன்.சரி எதிர்வரும் 16 ஆம் திகதியாவது அரச அதிபரால் நல்லபதில் கிடைக்குமென நம்புவோம் என்றார்.

மொத்தத்தில் 50 நாட்களைக் கடந்தும் அந்த மக்கள் மனவுறுதியோடு அர்ப்பணிப்போடு தொடர்ந்து போராடுவதைப் பார்க்கின்றபோது அவர்களுக்கான வெற்றி அண்மிக்கின்றது எனலாம்.

(வி.ரி.சகாதேவராஜா)