யுத்தங்களால் அழிவுகளைச் சந்தித்த உலக நாடுகள் அமைதியையும் அபிவிருத்தியையும் அடைந்துள்ளபோதும் நாம் மீண்டும் மீண்டும் அழிவுப் பாதைகளையே தெரிவு செய்கின்றோம் என தேசிய சமாதானப் பேரவையில் முகாமையாளர் சமன் செனவிரட்ன தெரிவித்தார். 

உலக யுத்தங்களால் அழிவுகளைச் சந்தித்த உலக நாடுகள் நடந்து முடிந்த அழிவுகளிலிருந்து பாடம் கற்று அமைதியையும் அபிவிருத்தியையும் அடைந்துள்ளபோதும் நாம் மீண்டும் மீண்டும் அடைந்துள்ளபோதும் துரதிஷ்டவசமாக நாம் தொடர்ந்தும் அழிவுப் பாதைகளையே தெரிவு செய்வது வருத்தமளிக்கிறது என தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர்  சமன் செனவிரட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாடுகள் (Batticaloa District Inter Religious Committee) பற்றிய அமர்வு நேற்று  மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 40 பேருக்கு மேற்பட்ட மதப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கருத்திட்ட முகாமையாளர்,  

எமது நாடு மும்முறை தேசிய ரீதியான முரண்பாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றது. ஆனாலும் அதிலிருந்து மீண்டெழுவதற்கான எந்தவித யுக்தித் திட்டமிடலோ உபாயங்களோ இல்லாமல் இன்னமும் நாம் முரண்பட்டுக் கொண்டு சீரழிந்த வண்ணமே காலத்தைக் கடத்துகின்றோம்.

1972இல் நாட்டின் இளைஞர்கள் சிலர் அணிதிரண்டு முரண்பாடு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இளைஞர் குழாம் 1987ஆம் ஆண்டு கலகத்தைத் தோற்றுவித்தார்கள்.

பின்னர் வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டம் உருவானது. இப்படியாக மூன்று கட்டங்களில் எமது நாடு தேசிய நெருக்கடிகளையும் அழிவுகளையும் சந்தித்திருக்கின்றது.

இதேவேளை, நமது நாட்டில் ஏற்பட்ட அழிவுகள் முரண்பாடுகள் என்பனவற்றை விட எத்தனையோ மடங்கு அதிகமான பேரழிவுகளை பல தடவைகள் சந்தித்த உலக நாடுகள் குறிப்பாக ஜேர்மன், ஜப்பான் போன்ற நாடுகள் அவற்றிலிருந்து மீண்டு அபிவிருத்தியை நோக்கி முன்னேறியுள்ளன.

அங்கே இப்பொழுது மனித உரிமைகள் உச்சத்தில் உள்ளன. பொருளாதார வளர்ச்சி சிகரத்தைத் தொட்டுள்ளது. எல்லாவற்றையும் விட மெச்சத்தக்க அளவில் அமைதி நிலவுகிறது.

முதலாவது உலக யுத்தம் 1914இல் இருந்து 1918வரை இடம்பெற்றபொழுது அதிலே ஜேர்மன் நாடுதான் பிரதான பாத்திரம் வகித்தது. அந்த யுத்தத்தின் விளைவாக சுமார் 14 மில்லியன் பேர் செத்து மடிந்தார்கள்.

இரண்டாவது உலக மகா யுத்தம்  1939-1945 வரை இடம்பெற்றபொழுது 60 மில்லியன் பேர் கொல்லப்பட்டார்கள். கொடுமைகள் நிகழ்ந்தன. மனிதப் பேரவலம் உருவானது.

இத்தகைய இரண்டு பாரிய உலக யுத்தங்களையும் இழப்புக்களையம் சந்தித்த நாடு ஜேர்மன் ஆனாலும் அவர்கள் துவண்டு விடாமல் அழிவுகளிலிருந்து ஆக்கபூர்வமான பாடங்களைக் கற்று உலக அபிவிருத்திக்கே முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்கள்.

உலக யுத்தங்களால் ஜப்பான் ஹிரோஷிமா நகரமும் அழிவடைந்தது.

உலக யுத்தங்களின் அழிவுச் சாட்சியங்கள் நமது நாட்டிலும் விரவிக் கிடக்கின்றன.

திருகோணமலை நிலாவெளி வீதியில் சுமார் 300 உலக நாட்டுப் படை வீரர்களின் நினைவுக் கல்லறைகள் இப்பொழுதும் உள்ளன.

300 பிரித்தானியா, இந்தியா, இலங்கை, மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளின் இளம் படை வீரர்கள் இந்த நினைவிடக் கல்லறைகளில் சரித்திரமாக்கப்பட்டுள்ளார்கள்.

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் பொதுநூலகத்தின் அருகில் 2ஆம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் கட்டப்பட்ட நினைவுத் தூபிகள் உள்ளன.

குருநாகல் நகர மையத்தில் உலக மகா யுத்தத்தை நினைவுச் சின்னமாகக் கொண்ட நினைவுத் தூபி உள்ளது.

கண்டி நகரின் அருகில் முதலாம் இரண்டாம்; உலக யுத்தங்களை மையப்படுத்திய யுத்த நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன.

கொழும்பு ஜாவத்தைப் பிரதேசத்திலும் உலக யுத்த நினைவுக் கல்லறைகள் உள்ளன.

இவைகளெல்லாம் நாம் விரும்பியோ விரும்பாமலோ யுத்தங்களின் பங்காளிகளாக வரலாறு நெடுகிலும் இருந்தே வந்திருக்கின்றோம் என்பதைப் புலப்படுத்துகின்றன.

1948 வரையும் நாம் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் தான் இருந்து வந்துள்ளோம்.

அதனால் 2ஆம் உலக யுத்தத்தின் பங்காளிகளானோம்.

இனிமேலும் நாம் யுத்த அழிவுகளின் பங்காளிகளாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை நாட்டுப் பிரஜைகளாகிய நாம் அனைவரும் இன மத மொழி பேதங்களைக் கடந்து சத்தியவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். அழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அமைதியையும் அபிவிருத்தியையும் நோக்கித் திரும்ப வேண்டும் என்றார்.