ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்கின்ற பெருஞ்சதியில் இந்தியாவின் பங்கும், பங்களிப்பும் உண்மையிலேயே இருக்குமானால் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான பி.எச்.பியசேன கோரியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை படுகொலை செய்கின்ற சதி திட்டத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்கிற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் உள்ளார்.

இது தொடர்பாக விடுத்த ஊடக அறிக்கையிலேயே பொடியப்பு பியசேன இவ்வாறு கோரியுள்ளார்.

இவரின் அறிக்கை வருமாறு,

இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை படுகொலை செய்கின்ற சதித்திட்டம் தொடர்பான செய்திகள் முழு நாட்டையுமே பேரதிர்ச்சியின் உச்சத்துக்கு இட்டு சென்று உள்ளன. குறிப்பாக இச்சதி திட்டத்துடன் இந்தியர் ஒருவர் தொடர்புபட்டு உள்ளார் என்கிற அண்மைய தகவல் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே இப்படுகொலை சதியில் இந்தியாவின் பங்கு, பங்களிப்பு ஆகியன தொடர்பாக முழுமையான முறையான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். சதி திட்டத்தில் உண்மையிலேயே இந்தியாவின் பங்கும், பங்களிப்பும் இருக்குமானால் இந்தியாவுடனான இராஜதந்திர உறவு அனைத்தையும் இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை மூட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்ட இன பிரச்சினைக்கு இந்தியாவே தூபம் இட்டது என்பது கடந்த கால வரலாறு ஆகும். குறிப்பாக தமிழ் இயக்கங்களுக்கு பணம் கொடுத்து பிரிவினையை இந்தியா ஊக்குவித்தது. இந்திய அமைதி படை தமிழர் பிரதேசங்களில் புரிந்த கொடூர அட்டூழியங்களையும் நாம்  மிக நன்றாகவே அறிவோம். இவற்றின் காரணமாகத்தான் அந்நாட்டு பிரதமர் ராஜிவ் காந்தியின் உயிரை இந்தியா விலை கொடுக்கவும் நேர்ந்தது. இலங்கையில் இன பிரச்சினை என்றென்றைக்கும் அமைதி வழியில் தீர்க்கப்படவே கூடாது என்பது இந்தியாவின் பெருவிருப்பம் ஆகும். அகிம்சை தேசம் என்று சொல்லி கொள்கின்ற இந்தியாவின் இம்சைகளை இனியும் பொறுக்க முடியாது என்றும் கோரியுள்ளார்.