சட்டம் ஒழுங்கு அமைச்சை  எனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுத்தேன் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நோக்கத்தில் எனக்கு குறித்த அமைச்சு வழங்கப்படவில்லையென சரத் பொன்சேகா.

சட்டம் ஒழுங்கு அமைச்சை   எனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுத்தேன். எனினும் எனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்கினால் முன்னைய ஆட்சியில் முக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நோக்கத்தில் எனக்கு குறித்த அமைச்சு வழங்கப்படவில்லையென முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இதேவேளை, யுத்தவெற்றி தொடர்பில் அறியாதவர்கள் யுத்தத்தின் இறுதிவாரம் குறித்து பேசுவது வேடிக்கையானது, வடக்கில் முகாம்களை அகற்றுவது ஆரோக்கியமானதல்ல. இந்நிலையில், யுத்தத்தை வெற்றி கொள்வதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு எமக்கு இருந்தது.  எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் அழுத்தங்கள் குறித்த   தகவல்கள் வந்துகொண்டிருக்கின்ற நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யுத்தத்தை வெற்றிகொண்டதில் எமது பங்களிப்பே அதிகமானது. அப்போதைய  இராணுவத் தளபதி என்ற வகையிலும் யுத்தத்தை முழுமையாக கையாண்டவர்  என்ற அடிப்படையிலும் இறுதிக்கட்ட யுத்தத்தை நாம் நேர்த்தியாக செய்தோம் என்பதை  உறுதியாக கூறுவேன். 

அதேபோல் யுத்த வெற்றிக்கு  இன்று பலர் உரிமைகோரி வருகின்றனர். இறுதி வாரங்கள் குறித்தும், யுத்த வெற்றி குறித்தும் தெரியாதவர்கள் இன்று யுத்தத்தை வெற்றிகொண்ட கதைகளை கூறுகின்றனர்.

இறுதி நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இருக்கவில்லை. நானும் சில நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். எனினும் இறுதி இரண்டு வாரத்தில் யுத்தத்தை வெற்றிகொள்ளும் அளவிற்கு எந்த கடினமான நகர்வுகளும் இருக்கவில்லை. அதற்கு முன்னரே நாம் யுத்தத்தை முழுமைப்படுத்திவிட்டோம்.

யுத்தத்தை வெற்றிகொள்ள சர்வதேச உதவிகள் எமக்குக் கிடைத்தன. குறிப்பாக இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்புகள் எமக்குக் கிடைத்தன. ஆனால் எந்த அழுத்தங்களையும்  இந்தியா பிரயோகிக்கவில்லை.  

இன்று வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து நாம் திருப்தியடையவில்லை.

தேசிய பாதுகாப்பு என்பது இலங்கையின் சகல பகுதியையும் சார்ந்தது.வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுவதை மட்டுமே பேசினால்  வேறு பல காரணிகளை நாமும் பேசவேண்டிய நிலைமை உருவாகும்.ஒவ்வொருவரும்  தமது நலன்களுக்காக வெவ்வேறு கருத்துக்களை கூறலாம். ஆனால் உண்மை என்னவென்பது எனக்குத் தெரியும்.

இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பினடைவை சந்தித்துள்ளது. அரசாங்கத்திற்குள் உண்மை முகங்கள் இல்லை. மக்களிடம் ஒரு கருத்தையும் அமைச்சரவையில் வேறு கருத்தையும் கூறிக்கொண்டுள்ளனர்.  

சட்டம் ஒழுங்கு அமைச்சை   எனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுத்தேன். எனினும் எனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்கினால் முன்னைய ஆட்சியில் முக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நோக்கத்தில் எனக்கு குறித்த அமைச்சு வழங்கபடவில்லை. 

எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி வாக்குறுதிகளை ஜனாதிபதியும் பிரதமரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்  என்றார்.