(இராஜதுரை ஹஷான்)

100 நாள் வேலைத்திட்டத்தில் நாட்டை  செல்வந்த நாடாக மாற்றியமைப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய அரசாங்கம் இன்று  2025 இல் நாட்டை செல்வந்த நாடாக மாற்றியமைப்போம் என்று  குறிப்பிடுவது பகல் கனவு காண்பதாகவே உள்ளது என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் குறுகிய கால ஆட்சியில் நாடு பொருளாதார ரீதியில் பெரிதும் வீழ்ச்சியைடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கம் தொடர்ந்தால் இலங்கை வறுமை கோட்டிற்கு கீழ்  உள்ளடங்கும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் நிலைமை உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

மஹிந்தவின் காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் எவ்விதத்திலும்  மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. தேசிய அரசாங்கம் ஆட்சி வந்த காலத்தில் இருந்து பொய்யான வாக்குறுதிகளை மாத்திரமே முன்வைக்கின்றது. 

ஆனாலும் கடந்த அரசாங்கத்தினை குற்றம் சுமத்துவதையும் தமது அரசியல் கொள்கையாகவும் மாற்றிக்கொண்டது. தற்போது நாடு  எதிர்கொண்டுள்ள பொருளாதார  வீழ்ச்சியினை வைத்துக் கொண்டு  2025 ஆம் ஆண்டு இலங்கையினை செல்வந்த நாடாக மாற்றியமைக்க எத்தனிப்பது நகைப்புக்குரியது. தற்போதைய நிலைமை 2025 வரை தொடர்ந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளடங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம் பிடிக்கும் நிலைமை தோற்றம் பெறும் என்றார்.