ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு தவறுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

காரொன்றில் சென்ற 40 வயதான பெண் மீதே மற்றுமொரு காரில் வந்த இனந்தெரியாத நபரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் இடம்பெற்ற போது குறித்த பெண்ணின் 8 வயதான மகளும் அவருக்கு அருகில் இருந்துள்ளார். சம்பவத்தில் குறித்த சிறுமிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பேலியாகொடை பொலிஸ் நிலையத்திற்கு மினுவங்கொடையை சேர்ந்த பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவர் சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் குறித்த பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் பயணித்த காரும் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் காரும் தோற்றத்தில் ஒத்திருந்த நிலையில், துப்பாக்கிதாரிகள் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு சென்று திரும்பியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரை இலக்குவைத்தே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் தவறுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.