(லியோ நிரோஷ தர்ஷன்)
ரூபாவின் வீழ்ச்சி நிலையை சீர் செய்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு விசேட பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். 

ஏற்றுமதி பொருளாதாரத்தினை வலுப்படுத்தி அமெரிக்க டொலர் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே இந்த நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்துள்ளது. நிபுணர் குழுவின் ஆலோசனைகளின் பிரகாரம் ஏற்றுமதிகளை அதிகரிக்கவும அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா எடுத்த முயற்சி தோல்விக்கண்டுள்ளது. எனவே இந்தியாவை பின்பற்றாது மாற்றுவழியில் செயற்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இலங்கையில் ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறுகிய மற்றும் நீண்ட கால ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் ஊடாக அதிகளவிலான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் குறுகிய காலத்திற்குள் அதிகளவில் அந்நிய செலாவணியை ஈட்ட கூடிய துறைகளை அபிவிருத்தி செய்வதன் அவசியம் குறித்தும் பொருளாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடதக்கது.