சிறுநீரக கற்களை அகற்றும் நவீன சத்திர சிகிச்சை முறையை வைத்தியர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். 

உணவு பழக்க வழக்கத்தையும், பணியாற்றும் பாணியையும் மாற்றிக் கொண்டதால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட இடங்களின் அளவு அதிகரித்துவிட்டதாலும், எம்முடைய உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீரை பருகுவதற்கு மறந்துவிடுகிறோம் அல்லது அலட்சியப்படுத்திவிடுகிறோம். இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு முதல் இரண்டரை லீற்றர் அளவிற்கு வெளியேற வேண்டிய சிறுநீர் வெளியேறுவதில்லை. இதன் காரணமாகவும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. 

சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு இதுவரை பலவகையினதான சத்திர சிகிச்சைகள் இருந்தன.  அனைத்து உரிய பலனை அளித்து வந்த நிலையில், இந்த சத்திர சிகிச்சையினை மேலும் எளிமைப்படுத்தவும், சிறுநீரக கற்களை ஒரு முறை அகற்றிய பின்னர் மீண்டும் மீண்டும் வருவதை தடுக்கவும் கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட நவீன சத்திர சிகிச்சை தேவை என்று வைத்தியர்கள் அறிந்துகொண்டனர்.

இதன் விளைவாக தற்போது ஹோல்மியம் யாக் லேசர் சர்ஜேரி என்ற நவீன சத்திர சிகிச்சையைக் கண்டறிந்திருக்கிறார்கள். இத்தகைய சத்திர சிகிச்சையின் போது சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தில் இருந்தாலும், சிறுநீர் பையில் இருந்தாலும், சிறுநீர் வெளியேறும் பாதையில் இருந்தாலும் இத்தகைய லேசர் சர்ஜேரியை பயன்படுத்த இயலும். இதன் போது நெகிழ்வான பைலோஸ்கோப்பி எனப்படும் மிகவும் மெல்லிய குழாய் ஒன்று சிறுநீர் வெளியேறும் பாதை வழியே உள்ளே செலுத்தப்பட்டு, சிறுநீரகத்தினை அதில் பொருத்தப்பட்டுள்ள கமெரா வழியாக பார்வையிட்டு, சிறுநீரக கற்கள் எந்தளவிற்கு இருந்தாலும் அதனை அங்கேயே உடைத்து, அதனை உறிஞ்சி அகற்றிவிடும். 

இதனால் நோயாளிக்கு இரத்த இழப்பு இல்லை. வலி இல்லை. பெரிய கற்களை எளிதாக உடைக்க இயலும், வீட்டிற்கு உடனடியாக திரும்ப இயலும். கற்கள் மீண்டும் வந்தாலும் வலியற்ற இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டு பலனடைய இயலும்.