நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கொள்கைகள் மாறவில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கொள்கைகளே முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் நாம் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் கூறுகையில்,
அரசாங்கம் வரிகளை அதிகரித்து மக்கள் மீதான வாழ்க்கைச் சுமையினை அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது. இவ்வாறு நாட்டையும் அரசாங்கம் நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
நாட்டில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டுள்ளது. ஆனால் கொள்கை மாற்றம் ஏற்பட வில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலக் கொள்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது அதனை ஏற்றுக் கொள்கின்றோம். அதனை தீர்ப்பதற்கு முன்பதாக நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதனை விடுத்து எம்.பி.க்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜே.வி.பி.யினர் பாராளுமன்றத்தில் விவாதத்தினை கோரியுள்ளதோடு, பொருளாதார நிலைமைகள் மற்றும் மக்கள் மீதான வரிகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. தேவையென்றால் எதிர்காலத்தில் போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.