பரபரப்பாக நடைபெற்று முடிந்த 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பங்களாதேஷ் அணியை மூன்று விக்கெட்டுக்களினால் வீழ்த்தி 7 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பங்களாதேஷ் அணியை பணித்தார். இதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 48.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் லிட்டன் தாஸ் 121 ஓட்டத்தையும், மெய்டி ஹசான் 32 ஓட்டத்தையும்,  சௌம்யா சர்க்கார் 33 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

223 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்தனர். 

தவானுடன் இணைந்து ரோஹித் சர்மா அதிரடியாக துடுப்பெடுத்தாடி வர தவான் 4.4 ஆவது ஓவரில் நஸ்முல் இஸ்லாமின் பந்து வீச்சில் 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 35 ஓட்டத்தை பெற்றுக் கொண்டபோது தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 

தவானுக்கு அடுத்தபடியாக ஆடுகளம் நுழைந்த ராயுடுவும் வந்த வேகத்திலேயே 2 ஓட்டத்துடன் மோர்ட்டாஸாவின் பந்து வீச்சில் ரஹிமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தாடிய ரோஹித் சர்மா அதிரடியா ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 16 ஆவது ஓவரில் 80 ஓட்டங்களை கடந்தது. இருப்பினும் 16.4 ஆவது பந்தில் ரோஹித் சர்மா 3 நான்கு ஓட்டங்கள் 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 48 ஓட்டத்துடன் ருபெல் ஹுசேனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து அரைசதம் விளாசும் வாய்ப்பினை தவறவிட்டார்.

தொடர்ந்து தோனி களமிறங்கி துடுப்பெடுத்தாடி வர இந்திய அணி 23.1 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் தோனி 10 ஓட்டத்துடனும் தினேஷ் கார்த்திக் 25 ஓட்டத்துடனும் இருந்தனர். எனினும் 30.4 ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் 37 ஓட்டத்துடன் மாமதுல்லாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து களம் விட்டு நீங்கினார். 

காத்திக்கின் வெளியேற்றத்தை தொடர்ந்து களமிறங்கிய கேதர் யாதவ் தான் எதிர்கொண்ட 4 ஆவது பந்திலே ஒரு 6 ஓட்டத்தை விளாசி அசத்த இந்திய அணி 33.3 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை குவித்தது.  37 ஆவது ஓவரின் ஆரம்பத்தில் இந்திய ரசிகர்களுக்கு ஒரு பேர் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது 36.1 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 160 ஆக இருந்தபோது தோனி 36 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால் போட்டியின் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.

இந் நிலையில் 38 ஆவது ஓவரில் கேதர் யாதவ் 19 ஓட்டத்துடன் காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வெளியேற புவனேஸ்வர் குமார் களமிறங்கி ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தாடிவர இந்திய அணி 40 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டத்தை பெற்றது. 

இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் 45.3 ஆவது ஓவரில் ருபெல் ஹசேனின் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் ஒரு 6 ஓட்த்தை விளசா இந்திய அணி 200 ஓட்டங்களை கடந்தது.

எனினும் முக்கிய தருணத்தில் அதாவது 47.2 ஆவது ஓவரில் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலையில் இருந்தபோது ஜடேஜா ருபெல் ஹுசேனின் பந்து வீச்சில் 23 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, உபாதை காரணமாக வெளியேறிய கேதர் யாதவ் ஆடுகளம் நுழைந்தார்.

12 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது பொறுப்பாக துடுப்பெடுத்தாடி வந்த புவனேஸ்வர் குமாரும் ரஹ்மானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 48.1 ஓவரில் 7 விக்கெட்டின‍ை இழந்து 214 ஓட்டத்தை பெற்றது.

இந் நிலையில் இந்திய அணிக்கு 6 பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருக்க இறுதித் தருணத்தில் 1 பந்துக்கு 1 என்ற நிலை வந்தபோது போட்டியை யாதவ் முடித்து வைத்தார்.

அதன்படி இந்திய அணி 50 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்று, ‍வெற்றி வாகை சூடி 7 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.

பந்து வீச்சில் நஸ்முல் இஸ்லாம், மொஷ்ரபி மோர்டாசா மற்றும் மாமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும், ருபெல் ஹுசேன், ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.