தமிழக முதல்வராகும் எண்ணம் தமக்கு இல்லை என்று தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘ஜெயலலிதா பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்திருக்கிறார். கட்சியில் இருந்த சில தலைவர்களை ஜெயலலிதா எப்படி நடத்தினார் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு எல்லா பெண்களும் அரசியலில் ஆண்களுக்கு நிகராக சம இடத்திற்கு வந்துவிட்டார்கள் என்று சொல்லமுடியாது.

பாராளுமன்றத்திலும், சட்டபேரவைகளிலும் பெண்கள் எவ்வளவு பேர் பங்கு வகிக்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். மத்திய அமைச்சர் பதவி, முதல்வர் பதவி என்று ஒவ்வொரு பதவியாகப் பாருங்கள்.

பெண்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். அதனால் தான் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவேண்வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தி.மு.க.வைப் பொருத்தவரை தற்போது ஏராளமான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

நான் எதிர்பார்க்கக்கூடிய அளவிற்கான மாற்றங்கள் வரவேண்டும். வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே சமயத்தில் தமிழக முதல்வராகும் எண்ணம் இல்லை. எமக்கு டில்லியில் அரசியல் பணி செய்வதைத்தான் விரும்புகிறேன்.’ என்றார்.

முன்னதாக சென்னையில் தொழில் வர்த்தக சபைகள் சம்மேளனத்தின் மகளிர் பிரிவு சார்பில் அரசியலும், கவிதையும் என்ற தலைப்பில் கலந்துரையாரல் நடைபெற்றது அதில் கனிமொழி பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.